காட்மாண்டு, மே 3 – நட்பு ஊடகமான பேஸ்புக், தனது பயனர்கள் மூலம் திரட்டிய 10 மில்லியன் டாலர்களை நேபாள நாட்டிற்கு நிவாரண நிதியாக வழங்க உள்ளது.
நேபாளில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில், இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படு காயங்களுடன் மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா, ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மீட்புப் படை வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இயற்கை பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டிற்கு பல்வேறு நாடுகளும், சமூக அமைப்புகளும் நிதியுதவி அளித்து வருகின்றனர். நட்பு ஊடகமான பேஸ்புக், தனது பயனர்களிடத்தில் நேபாள மக்களுக்கு நிதியுதவி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தது. அதற்கான பதிவினை பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் நேரடியாக தனது கணக்கில் இருந்து வெளியிட்டார்.
சுமார் 15 கோடிக்கும் அதிகமானோர் பார்த்த அந்த பதிவிற்கு, 5 லட்சம் பேர் கடந்த 2 நாட்களில் மட்டும் நிவாரண உதவியாக 10 மில்லியன் டாலர்களை வழங்கி உள்ளனர்.
இது குறித்து மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், “சுமார் 5 லட்சம் பயனர்கள் எனது பதிவிற்கு மதிப்பளித்து 10 மில்லியன் டாலர்களை பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு நிதியுதவியாக வழங்கி உள்ளனர். அந்த நிதியுடன், பேஸ்புக் சார்பாக 2 மில்லியன் டாலர்களைச் சேர்த்து மொத்தம் 12 மில்லியன் டாலர்கள் நிவாரண நிதியாக வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக அனைத்துலக சமுதாயம் ஒன்றிணைவதை பார்ப்பதற்கு பெருமையாக உள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.