இலண்டன், மே 4 – இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியரின் பெண் குழந்தைக்கு சார்லோட் எலிசபெத் டயானா (Charlotte Elizabeth Diana) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பினை கென்சிங்டன் அரண்மனை இன்று வெளியிட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரிட்டனின் அரச பரம்பரையில் முதன் முறையாக ஓர் இளவரசி பிறந்து இருப்பது அரச குடும்பத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இங்கிலாந்து மக்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது.
இளவரசியின் பெயர் மிகுந்த சிந்தனைக்குப் பின்னர் பல அர்த்தங்களை உள்ளடக்கிய பெயராகக் கருதப்படுகின்றது.
முதல் பெயரான சார்லோட் என்பதில் வில்லியம் இளவரசரின் தந்தையான சார்ல்ஸ் இளவரசரின் பெயர் அடங்கியுள்ளது. இரண்டாவது பெயரான எலிசபெத் என்பது – சொல்லவே வேண்டியதில்லை நடப்பு மகாராணியாரும், வில்லியம் இளவரசரின் கொள்ளுப் பாட்டியுமான எலிசபெத் ராணியின் பெயராகும்.
மூன்றாவது பெயராக இணைந்திருப்பது டயானா. வில்லியம் இளவரசரின் தாயாரும், தான் வாழ்ந்த காலத்தில் உலகமெங்கும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் கொள்ளை கொண்டவருமான இளவரசி டயானாவின் பெயரும் புதிய குட்டி இளவரசியின் பெயரில் ஒட்டிக் கொண்டுவிட்டது.
இப்படியாக ஒரு புதுமையான பெயராக, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூன்று முக்கிய பிரபலங்களை உள்ளடக்கிய பெயராக குட்டி இளவரசியின் பெயர் உருவெடுத்துள்ளது.