நியூயார்க், மே 6 – தாய்மார்களுக்கு தேவையான அனைத்து வசதி மற்றும் பாதுகாப்புகளை கொண்ட நாடாக நார்வே தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வேவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பின்லாந்து உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற தொண்டு நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில், பிரசவத்தின் போது ஏற்படும் தாய்-சேய் மரணம், தாய்மார்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, பொருளாதார நிலை போன்ற காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் முதல் பத்து இடங்களில் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தின. 9-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா மட்டும் தான் ஐரோப்பாவை சேராத ஒரே நாடு. பிரான்ஸ் 23-வது இடத்திலும், இங்கிலாந்து 24-வது இடத்திலும் உள்ளது.
அமெரிக்கா இரண்டு இடங்கள் சரிந்து 33-வது இடத்தில் இருக்கிறது. இப்பட்டியலில் ஜிம்பாப்வே, வங்காள தேசம் மற்றும் ஈராக் நாடுகளுக்கு கீழே 140-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல ஆப்பிரிக்க நாடுகளே மிக மோசமான நிலையில் உள்ளன. சோமாலியா கடைசி இடத்திலும் அதற்கு மேல் காங்கோ மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகியவை உள்ளன.
முதல் பத்து இடத்தில் இருக்கும் நாடுகளில் 298 தாய்மார்களில் ஒரே ஒருவர் மட்டும் தான் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தையை இழக்கிறார். அதுவே கடைசி இடங்களில் இருக்கும் நாடுகளில் 8-ல் ஒருவர் தன்னுடைய குழந்தையை பரிகொடுக்கிறார்.