பாடாங் பெசார், மே 6 – மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்கள் மற்றும் வங்காள் தேசத்தை சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர்.
அப்படி கடல் மார்க்கமாக கள்ளத்தோணிகளில் அழைத்து வரப்படுவர்கள், சில ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
அவர்கள் குடியேறிகளை காட்டிற்குள் தங்க வைத்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் சுமார் மூன்று பாழடைந்த குடியிறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அங்கு சுமார் 700 பேர் வரை தங்கியிருந்திருக்கக் கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மனித கடத்தல் சம்பவத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க இயலாத தாய்லாந்து அரசாங்கத்தை அமெரிக்க கண்டித்துள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படியும் வலியுறுத்தியுள்ளது.