கோலாலம்பூர்- நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெர்லிஸ் சவக்குழிகள் விவகாரம் தொடர்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 6 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மியன்மார் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஆறு பேரில் தாய்லாந்தைச் சேர்ந்தவர் என நம்பப்படும் ஒரு பெண்ணும் அடங்குவார். சந்தேகத்துக்குரிய இதர 5 ஆடவர்களும் இன்னும் மலேசியாவில்தான் இருக்க வேண்டும் என காவல்துறை சந்தேகிக்கிறது.
சவக்குழிகள் விவகாரத்தை விசாரிக்கும் சிறப்புக் குழுவுக்கு காவல் துறையின் துணை ஆணையர் கோ கோக் லியாங் தலைமையேற்றுள்ளார். முப்பது சாட்சிகள் மற்றும் ரோஹின்யா அகதிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆறு சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“எனினும் மேற்கொண்டு புதிய தகவல்கள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அவை விசாரணைக்கு உதவும். சந்தேக நபர்களிடம் பெறவுள்ள வாக்குமூலத்தின் உதவியோடு முக்கிய குற்றவாளியை நெருங்க முடியும் என நம்புகிறோம். சந்தேக நபர்கள் இப்படுகொலைகளுக்கு திட்டமிட்டிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் உணவு விநியோகிப்பாளர்களாகவோ அல்லது காவல் பணியில் ஈடுபட்டவர்களாகவோ இருந்திருக்க வேண்டும்” என்று கோ கோக் லியாங் மேலும் கூறினார்.
மியன்மரைச் சேர்ந்த ரோகின்யா அகதிகளில் பலர் கொடூரமாகக் கொல்லப்பட்டு, அவர்களுடைய சடலங்கள், மலேசிய, தாய்லாந்து எல்லைப் பகுதியான கெடாவின், வாங் கெலியானில் புதைக்கப்பட்டது கடந்த மே மாதம் வெளிச்சத்துக்கு வந்தது.