கோலாலம்பூர் – மலேசியா – தாய்லாந்து எல்லைப்பகுதியான வாங் கெலியானில் கடந்த 2015-ம் ஆண்டு, ஆள் அரவமற்ற காட்டுப்பகுதியில் நூற்றுக்கணக்கான புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றைத் தோண்டிப் பார்த்த அதிகாரிகள் பேரதிர்ச்சியடைந்தனர்.காரணம் அவற்றில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்டு புதைப்பட்டிருந்தன.
புதைக்கப்பட்டவர்கள் அனைவரும் மனிதக் கடத்தல் கும்பல்களால் கடத்தி வரப்பட்ட ரோஹின்யா முஸ்லிம்கள் போன்ற அகதிகளாக இருக்கலாம் என நம்பப்பட்டது.
இது குறித்த முதல் அறிவிப்பை மலேசியக் காவல்துறை 2015-ம் ஆண்டு மே மாதம் வெளியிட்டது.
ஆனால், என்எஸ்டி (நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்) செய்தி நிறுவனம் அதற்கென ஒரு சிறப்புக் குழுவை நியமித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திய ஆய்வின் அடிப்படையில் தற்போது பல அதிர்ச்சிகரமானத் தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
அதாவது, மலேசியக் காவல்துறை இந்த விவகாரத்தை கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதுவும் தாய்லாந்தில் அதே போன்ற புதைகுழிகள் கண்டறியப்பட்டு தாய்லாந்து அதிகாரிகள் மலேசியாவின் உதவியை நாடிய பின்னர் தான் மலேசியக் காவல்துறை அதனை அறிவித்தது.
ஆனால், இந்தப் புதைகுழிகள் குறித்து 2015-ம் ஆண்டு ஜனவரி மாதமே காவல்துறைக்குத் தெரியும் என்கிறது என்எஸ்டி.
மேலும், புதைகுழிகள் கண்டறியப்பட்ட இடத்தில் இருந்த தற்காலிகக் குடில்களை அகற்றிய காவல்துறை, அங்கிருந்த முக்கிய ஆதாரங்களையும் அழித்துவிட்டதாகவும், அதன் பின்னரே தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர் என்றும் என்எஸ்டி கூறுகின்றது.
இச்சம்பவம் காவல்துறை முற்றிலும் அறிந்து “மூடிமறைக்கப்பட்ட ஒன்று” என்றும் என்எஸ்டி குறிப்பிட்டிருக்கிறது.