பெர்லிஸ், மே 28 – குடியேறிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவங்களில் காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 12 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெர்லிசில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மனிதக் கடத்தல் முகாம் ஒன்றிலிருந்து மேலும் சில எலும்புக் கூடுகளை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
வாங் கெலியானில் அமைந்துள்ள இந்த முகாமை மனிதக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தற்காலிக முகாமாக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இன்று புதன்கிழமை மதியம் 12.45 மணிக்கு இந்த முகாமின் புதைகுழிகளில் இருந்து எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
“இரண்டு குடியேறிகளின் சடலங்கள் வெள்ளைத் துணியில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டன. இவ்விரண்டு சடலங்களும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட சவக்குழிகளுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டன. மற்ற குடியேறிகளின் சடலங்களை கண்டெடுக்கும் பணி நீடித்து வருகிறது” என்று புக்கிட் அம்மான் உதவி செயலர் டத்தின் அஸ்மாவதி அகமட் தெரிவித்தார்.
இதற்கிடையே, குடியேறிகள் கொல்லப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என துணை சபாநாயகர் டத்தோ இஸ்மாயில் முகமட் சைட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இது தொடர்பாக அலோர் ஸ்டார் தொகுதி பிகேஆர் உறுப்பினர் கூய் சியோ லியுங் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்.