கோலாலம்பூர், மே 7 – அனைத்து தொழில் சார்ந்த துறைகளுக்கும் முகவரி என்பது அவசியமான ஒன்று. நவீன காலத்தில், வர்த்தக ரீதியாக நிறுவனங்களுக்கான முகவரி என்பது வலைத்தளமே. பெரு நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வலைத்தளங்களை வைத்திருக்கும் பொழுது, வலைத்தளங்களை உருவாக்க இயலாத சிறு தொழில் நிறுவனங்கள் என்ன செய்வது?
தங்கள் பேஸ்புக் பக்கத்தையே வலைத்தளமாக மாற்றிக்கொள்ளும் வசதி இருந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு யோசனையின் செயல்வடிவமே ‘பேஜர்’ (Pager) என்னும் புதிய செயலியாகும்.
நியூ யார்க்கைச் சேர்ந்த மூன்று பொறியாளர்கள் உருவாக்கி உள்ள இந்த செயலி, பயனர்களின் பேஸ்புக் பக்கத்தை வலைத்தளமாக்கப் பயன்படுகிறது.
இந்த பேஜர் செயலியை திறன்பேசிகளில் மேம்படுத்தியவுடன், அதனுள் நுழைய பேஸ்புக்கின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அந்த பேஸ்புக் பக்கத்திற்கு செல்லும்போது, அங்கு பயனர்களின் பல்வேறு பேஸ்புக் பக்கங்கள் வரிசையாகத் தோன்றும். அவற்றில் இருந்து தேவையான ஒன்றைத் தேர்வு செய்து, அதில் உள்ள தகவல்களைக் கொண்டு அதனை ஒரு புதிய வலைத்தளமாக மாற்றிக் கொள்ள முடியும்.
வலைத்தளத்தின் முதல் பக்கம், ‘அறிமுகம்’ (About), ‘செய்தி’ (News), ‘நிகழ்வுகள்’ (Event) மற்றும் ‘கேலரி’ (Gallery) என்ற நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். அந்தந்த பகுதிகளுக்கு தகுந்தார் போல் தகவல்களை சேகரித்து வலைத்தளமாகப் பயன்படுத்தலாம்.
எனினும், இந்த புதிய செயலி இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. இது முழுமை பெற்ற பின்பு, அதனை சிறிய தொழில் செய்வோர் எத்தகைய செலவும் இல்லாமல் வலைத்தளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.