கோலாலம்பூர், மே 6 – அண்மையில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, தேசிய காவல்படைத் தலைவர் ஐஜிபி காலிட் அபு பக்கரை ‘BARUA UMNO’ (அம்னோவின் கைப்பாவை) என்று குறிப்பிட்டதற்காக சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலிக்கு காவல்துறை தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அஸ்மின் அலி ஐஜிபியிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூத்த காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ஷா சாலிகான் இது குறித்து
கூறுகையில், பிகேஆர் துணைத் தலைவர் கூறியுள்ள கருத்தானது
காவல்துறையினரின் மனதை ஆழமாகக் காயப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.
“காவல்துறை ஐஜிபி என்பது ஓர் அமைப்பாகும். அதை அவமானப்படுத்துவது என்பது
ஒட்டுமொத்த காவல்துறையினருமே அரசியல் கைப்பாவைகள் என்று குறிப்பிடுவதற்கு
ஒப்பாகும்,” என்று அறிக்கை ஒன்றில் ஷா சாலிகான் குறிப்பிட்டுள்ளார்.
எனவே காவல்துறையை அவமானப்படுத்திய அஸ்மின் அலி மன்னிப்பு கோர வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“ஆனால் இன்று வரை தாம் கூறிய கருத்தை மறுத்து அஸ்மின் அலி ஊடகங்களில்
அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. எனவே அவர் நாகரிக எல்லைகளைக் கடந்தும்,
அரசியல் ஆதாயங்களுக்காகவும் செயல்பட்டது உறுதியாகி உள்ளது,” என்று ஷா
சாலிகான் தெரிவித்துள்ளார்.
அஸ்மின் அலி மீது காவல்துறையில் 3 புகார்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.