Home நாடு அணு தொழில்நுட்பங்களை மலேசியாவுடன் பகிர்ந்துகொள்ள தயார் – ரஷ்ய தூதர்

அணு தொழில்நுட்பங்களை மலேசியாவுடன் பகிர்ந்துகொள்ள தயார் – ரஷ்ய தூதர்

556
0
SHARE
Ad

Valery_N._Yermolov (1)கோலாலம்பூர், மே 6 – அணு உலை மற்றும் அணு சக்தி மேம்பாடு தொடர்பில் மலேசியாவுடன் இணைந்து செயல்பட ரஷ்யா தயாராக உள்ளது என மலேசியாவுக்கான அந்நாட்டு தூதர் வேலரி என்.எர்மோலோவ் தெரிவித்துள்ளார்.

அணு தொழில்நுட்பத்தில் ரஷ்யாவுக்கு மிகச் சிறந்த அனுபவமும் நிபுணத்துவமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ரஷ்ய அணு தொழில்நுட்பங்களை
பல்வேறு நாடுகளும் பயன்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.

“அண்மையில் வியட்நாமில் அணு உலை ஒன்றை அமைத்துள்ளோம். அணு தொழில்துறை மேம்பாட்டில் வளர்ச்சி காண்பதில் மலேசியாவுக்கு உள்ள ஆர்வத்தை நாங்கள் அறிவோம்.”

#TamilSchoolmychoice

 

“ரஷ்ய தொழில்நுட்பங்கள் மிக பாதுகாப்பானவை, பல நாடுகளால்
பயன்படுத்தப்படுபவை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இவை அனைத்தையும்
விட மற்ற நாடுகளின் தொழில்நுட்பங்களைவிட எங்களுடைய தொழில்நுட்பங்களை
குறைந்த செலவில் பெற முடியும்,” என்று எர்மோலோவ் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுடன் தற்போதுள்ள நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் ரஷ்யா
ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த அவர், குறிப்பாக ராணுவத் துறையில் இணைந்து
செயல்படுவதில் மிகுந்த விருப்பம் உள்ளதாகக் கூறினார்.

மலேசிய விமானப்படை ரஷ்ய தயாரிப்புகளான மிக் 29, சுகோய் போர் விமானங்களை
தற்போது வரை வெற்றிகரமாக பயன்படுத்தி வருவதையும் அவர் சுட்டிக்
காட்டினார்.

“ஆயுத வர்த்தகத்தில் மட்டுமே நாம் கவனம் செலுத்தக்கூடாது. மலேசிய ராணுவ
வீரர்கள் ரஷ்ய ராணுவ மையங்கள் மற்றும் அகாதமிகளுக்கு வருகை புரிய
வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்,” என்று எர்மோலோவ் மேலும்
தெரிவித்தார்.