பாடாங் பெசார், மே 7 – மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்தும், அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கடந்த வாரம் குவியல் குவியலாக பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கும், மலேசிய ஆள்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என டெனாங்கனிடா எனும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெனாங்கனிடா அமைப்பின் இயக்குனர் க்ளோரின் தாஸ் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் புலம் பெயரும் அகதிகளை, மலேசிய ஆள்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைகளுக்காக கடத்துகின்றனர். இவர்களிடம் மியான்மர் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த ரோஹின்யா குடியேறிகள் தான் அதிகம் மாட்டிக் கொள்கின்றனர்.”
“இது தொடர்பாக மீட்கப்பட்ட அகதிகள் சிலர் எங்களுக்கு அளித்த தகவலின் படி, ரோஹின்யா மற்றும் மியான்மர் குடியேறிகள் அகதிகள் முகாம்களை விட்டு வெளியேற்றப்பட்டவுடன், ஆள் கடத்தல் கும்பலுக்கு பாலியல் தேவைகளுக்காகவும், அடிமை வேலை செய்யவும் விற்பனை செய்யப்படுகின்றனர்”
“இதில் பலர், பணத்திற்காகவும் கடத்தப்படுகின்றனர். அப்படி கடத்தப்படுபவர்களின் உறவினர்களிடமிருந்து கேட்ட பணம் கிடைக்கவில்லை எனில், கடத்தப்பட்டவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “தெற்கு தாய்லாந்தில் ஆள் கடத்தல் என்பது பெருகி விட்டது. இதற்கு மலேசியர்களும் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த விவகாரத்தில் மலேசிய உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அகதிகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலேசிய உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜஃபார் கூறுகையில், “க்ளோரின் தாஸ் கூறியதுபோல், சொங்காலா சம்பவத்தில் மலேசியர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஐநா அகதிகள் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், குறிப்பிட்ட அந்த எல்லையில் அரங்கேறி வரும் அக்கிரமங்கள் பற்றி மீட்கப்பட்ட அகதிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். தற்போது அதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.