Home நாடு அரசியல் பார்வை: வான் அசிசா வாக்குகள் சரிவு ஏன்?

அரசியல் பார்வை: வான் அசிசா வாக்குகள் சரிவு ஏன்?

748
0
SHARE
Ad

மே 8 – (பெர்மாத்தாங் பாவ் தொகுதி இடைத் தேர்தலில் வான் அசிசா வாக்குகள் சரிவுக்கு பாஸ் காரணமா? இந்திய வாக்குகள் காரணமா? அல்லது பக்காத்தான் ராயாட் முறிவா? – செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் அரசியல் பார்வை)

பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் தேசிய முன்னணியின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், அன்வார் இப்ராகிமின் மீது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தும், வான் அசிசாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது அரசியல் பார்வையாளர்களின் புருவங்களை விரியச் செய்திருக்கின்றது.

அன்வார் மீதும் – அவரது குடும்பத்தார் மீதும் அனுதாப அலை வீசியதும் உண்மைதான் என்றாலும் மற்ற சில காரணங்கள் அந்த அனுதாப அலையையும் மீறி வான் அசிசாவின் வாக்கு வங்கியைப் பாதித்திருக்கின்றது.

#TamilSchoolmychoice

Wife of Malaysian opposition leader Anwar Ibrahim, Wan Azizah (C) react when her wins the by-election in Permatang Pauh, Penang, Malaysia, 07 May 2015. Wan Azizah defeated other candidates to win the Malaysian parliamentary seat that her husband, opposition leader Anwar Ibrahim, was forced to vacate after he was jailed for sodomy. Anwar had been MP of the constituency for four terms from 1982 to 1998.

நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெற்றிக் களிப்பில் வான் அசிசா (படம்: EPA)

வாக்களிப்பு விகிதாச்சாரம் காட்டுவது என்ன?

முதலாவதாக, வாக்களித்தவர்களின் எண்ணிக்கை இந்த முறை வெகுவாகக் குறைந்தது. சுமார் 74 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்ததால், வான் அசிசாவின் பெரும்பான்மையும் குறைந்தது என்ற ஒரு கருத்தும் வெளியிடப்பட்டிருக்கின்றது. கடந்த 2013 பொதுத் தேர்தலில் 88.3 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

பிகேஆர் கட்சி பெற்ற 30,316 வாக்குகள் பெற்று மொத்த வாக்குகளில் 57.1 சதவீத ஆதரவைப் பெற்றிருந்தது. இது கடந்த தேர்தலில் பெற்றதை விட இரண்டு சதவீதம் ஆதரவு பலம் குறைந்திருப்பதைக் காட்டுகின்றது. வாக்காளர் எண்ணிக்கை சரிவும் இந்த சரிவுக்குக் காரணமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதே சமயம் தேசிய முன்னணியோ 21, 475 வாக்குகள் பெற்று மொத்த வாக்குகளில் 40.44 சதவீத ஆதரவைப் பெற்றிருக்கின்றது. இது கடந்த தேர்தலை விட 0.38 சதவீதம் அதிகமாகும்.Wife of Malaysian opposition leader Anwar Ibrahim, Wan Azizah (C) react when her wins the by-election in Permatang Pauh, Penang, Malaysia, 07 May 2015. Wan Azizah defeated other candidates to win the Malaysian parliamentary seat that her husband, opposition leader Anwar Ibrahim, was forced to vacate after he was jailed for sodomy. Anwar had been MP of the constituency for four terms from 1982 to 1998.

தனது வெற்றிக்கு உறுதுணையாகப் பிரச்சாரம் செய்த லிம் குவான் எங் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வான் அசிசா (படம்: EPA)

ஆனாலும், இது தேசிய முன்னணிக்கு முன்னேற்றமாகக் கருத முடியாது. காரணம், நஜிப்பின் சொந்த மாநிலமான பகாங்கில் உள்ள ரொம்பினில் அதன் பெரும்பான்மை பாதியாகக் குறைந்துவிட்டதே இன்றைய அரசியல் நடப்பில் பெரிதாக விமர்சிக்கப்படுகின்றது.

மேலும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடி ஒருங்கிணைப்பாளராக தலைமையேற்க, துணைப் பிரதமர் முதற்கொண்டு பல அமைச்சர்கள் முகாமிட்டு தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர்.

பினாங்கு மாநில ஆட்சியைத் தக்க வைத்திருக்கும் ஜசெகவின் ஆதரவு பக்கபலம் இருந்தும், அன்வாரின் செல்வாக்கு எங்கும் பரவிக் கிடக்கும் தொகுதி என்ற பெருமை இருந்தும் – தன்னந்தனியாக பாஸ் கட்சி ரொம்பினில் காட்டியிருக்கும் பலத்தை – இங்கே பிகேஆர் கட்சியால் காட்ட முடியவில்லை.

அதற்கு மற்றொரு முக்கிய காரணம் பாஸ் கட்சியின் ஒத்துழையாமைதான்!

பாஸ் கட்சி ஒதுங்கி இருந்ததால் பின்னடைவா?

PAS-Logo-Sliderமற்ற தேர்தல்களைப் போல இந்த முறை பாஸ் கட்சி பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் இறங்கி வேலை செய்யவில்லை. பிரச்சாரத்தை பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் முன்னின்று நடத்த, ஹூடுட் பிரச்சனையால் முட்டி மோதிக் கொண்டிருக்கும் பாஸ் கட்சியும், ஜசெகவும் இணைந்தே வேலை செய்யவில்லை.

பாஸ் கட்சியின் கவனம் முழுக்க ரொம்பின் தொகுதியிலேயே இருந்தது.

இதனால், பாஸ் ஆதரவு வாக்காளர்கள் கணிசமான அளவில் வாக்குச் சாவடிகளுக்கு ஆர்வத்துடன் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மலாய் வாக்காளர்களின் ஆதரவு தனக்கு 4 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக வான் அசிசா தேர்தலுக்குப் பின்னர் பேசிய போது தெரிவித்திருக்கின்றார்.

மலாய் வாக்குகள் ஆதரவு உயர்ந்திருந்தாலும், பாஸ் ஆதரவு வாக்குகள் வராததே  வாக்கு பெரும்பான்மை சரிவுக்கான காரணங்களுள் ஒன்றாக இருக்கலாம்.

பினாங்கு மாநிலத்தின் சில தொகுதிகளில் பாஸ் கட்சிக்கு எப்போதும் கணிசமான செல்வாக்கு இருந்து வந்திருக்கின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்திய வாக்குகள் வான் அசிசாவுக்கு கிடைக்கவில்லையா?

இந்த முறை இந்திய வாக்குகள் எதிர்பார்த்த அளவுக்கு பிகேஆர் கட்சிக்குக் கிடைக்கவில்லை என ஆரம்ப கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

MIC-Logoஇந்தியர்களைப் பொருத்தவரை அவர்கள் மிகவும் பிரச்சனைகளுக்குரிய சமுதாயமாக இருப்பதால், அரசியல் பிரச்சனைகளை விட சமூக, பொருளாதார அம்சங்களுக்கே அவர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றார்கள்.

அன்வார் குடும்பம் மீதான அனுதாபம் என்ற ஒரே காரணத்துக்காக, மீண்டும் மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தாண்டி அவர்கள் வந்துவிட்டார்கள்.

இதன் காரணமாக, அவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து நேரடியாகத் தீர்த்து வைக்கும் மஇகா-தேசிய முன்னணி பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகின்றார்கள் என்பது கண்கூடாகத் தெரிகின்றது.

பேராசிரியர் ராமசாமியின் பலவீனமான பிரச்சாரம்

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியால் (படம்) தீவிரமாக இறங்கி இந்திய வாக்குகளை பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் கவர முடியவில்லை.

Ramasamy---Sliderஇடைத் தேர்தலுக்கு முன்பாகவே, அவர் பழனிவேலுவைத் தனிப்பட்ட முறையில் தங்கும் விடுதி ஒன்றில் சந்தித்தார் என்ற விவகாரத்தை தமிழ் நாளேடுகள் பெரிதுபடுத்தி அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருந்த காரணத்தால்,

மஇகாவுக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை அவரால் மேற்கொள்ள முடியவில்லை என்றும் – பழனிவேலுவின் தலைமையில் இயங்கும் மஇகாவுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க அவர் தயக்கம் காட்டுகின்றார் என்பது போன்ற தோற்றத்தையும் பத்திரிக்கைகள் ஏற்படுத்தியிருந்தது.

இதுவும் இந்திய வாக்குகளைக் கவர்வதில் பிகேஆர் கட்சிக்குப் பின்னடைவாக இருந்திருக்கலாம்.

எதிர்க்கட்சி இந்திய ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் வலுவான தலைவராக ராமசாமியால் பரிணமிக்க முடியவில்லை என்பதுடன்,

அரசாங்க அமைச்சர்கள் என்ற அதிகார பலத்தோடு களமிறங்கும் மஇகா தலைவர்களுக்கு இணையான பிரச்சார பலம் கொண்ட தலைவர்களை பக்காத்தான் ராயாட் கூட்டணியில் காண முடியவில்லை என்பது அவர்களின் மிகப் பெரிய பலவீனமாகத் தெரிகின்றது.

Palanivel Subra Comboமாறாக, மஇகாவினர், இந்த இடைத் தேர்தலில் தங்களின் உட்கட்சிப் பூசலை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, ஒன்றுபட்டு தீவிரமாக தொகுதித் தலைவர் சுரேஷ் முனியாண்டி தலைமையில் களமிறங்கி கடுமையாகப் பாடுபட்டனர்.

ஒருபுறம் பழனிவேல் தனது குழுவினருடன் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள – இன்னொரு புறம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் தொகுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்து, இந்தியர் பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்கியதும் கட்சியினருக்கும் – தேசிய முன்னணிக்கும் இந்திய வாக்குகளைச் சேகரிப்பதில் பெருமளவு உதவி புரிந்தது.

பக்காத்தான் ராயாட் புதிய பாதைக்குத் திரும்ப வேண்டும்

அன்வாரின் தனிமனித செல்வாக்கு – அன்வார் குடும்பத்தினர் மீதான அனுதாபம் – என்பது போன்ற அம்சங்கள் மலேசிய அரசியலில் ஒரு முடிவுக்கு வந்து விட்டன என்பதையே பெர்மாத்தாங் பாவ் முடிவுகள் நமக்குக் காட்டுகின்றன.

Anwar ibrahimஎதிர்க்கட்சி ஆதரவாளர்களும், தேசிய முன்னணி எதிர்ப்பாளர்களும் – அன்வாரையும் அவரது குடும்பத்தினரையும் தாண்டி ஒரு பெரிய எதிர்பார்ப்பை பக்காத்தான் ராயாட் என்ற எதிர்க்கட்சி கூட்டணி மீது வைத்திருக்கின்றார்கள்.

எத்தனை இடைத் தேர்தல்கள் நடைபெற்றாலும், அடுத்த பொதுத் தேர்தலிலும் அன்வார் இப்ராகிம் என்ற தனிமனிதனின் தாக்கமும் – ஆதிக்கமும் மேலோங்கியே இருக்கும் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது.

ஆனாலும்,

சிறந்த மாற்றுத் தலைமைத்துவம் – ஜனநாயக நடைமுறையில் ஆட்சி மாற்றம் – புரையோடிப் போன தேசிய முன்னணி சித்தாந்தங்களை உடைத்து நாடு வெளியே வரவேண்டும் என்ற ஆதங்கம் – ஊழலற்ற ஆட்சி – இன, மத பேதமற்ற, அனைவரும் மலேசியர்களே என்ற அணுகுமுறை – எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை –

போன்ற பல்வேறு அரசியல் காரணங்களுக்காகத்தான் மலேசியர்கள் பல தொகுதிகளில் பக்காத்தான் ராயாட் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு தங்களின் ஆதரவை வழங்கியிருந்தனர்.

இன்றைக்கு நஜிப் மீதும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதும் எழுந்திருக்கும் அதிருப்தி அலைகளை சரியான முறையில் திசை திருப்பி மக்கள் ஆதரவைப் பெறுவதில் பக்காத்தான் ராயாட் திணறுவது தெளிவாகத் தெரிகின்றது.

இன்றைக்கு ஒற்றுமையின்மையால் சிதறுண்டு இருக்கும் பக்காத்தான் ராயாட் – ஹூடுட் பிரச்சனையால் முரண்பாடுகளின் மொத்த உருவாக காட்சியளிக்கும் அந்தக் கூட்டணி – மீண்டும் பழைய பாதைக்குத் திரும்ப வேண்டும்.

இல்லாவிட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதோ, தேசிய முன்னணியை விட கூடுதல் ஆதரவை மக்களிடம் இருந்து பெறுவதோ – பக்காத்தான் ராயாட்டுக்கு எட்டாத கனியாகவே – கிட்டாத கனவாகவே – இருந்து வரும்.

-இரா.முத்தரசன்