கோலாலம்பூர், மே 10 – மஇகாவின் உயர்மட்டத் தலைவர்கள் இருவர் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தணிப்பதற்காக, அண்மையில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக தமிழ் நாளேடு ஒன்றில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆரூடங்களில் உண்மையில்லை என்றும், அத்தகைய சந்திப்புகள் ஏதும் இதுவரை நடந்ததாக ஆதாரம் இல்லை என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அப்படியே உயர்மட்ட மஇகா தலைவர்கள் சந்தித்திருந்தாலும் அதில் தவறு ஏதும் இல்லை, காரணம் இது கட்சிக்குள் நடக்கும் குடும்பச் சண்டைதான் என்றும்,
கட்சி நலனுக்காகவும் நெருக்கடிகளைத் தணிப்பதற்காகவும் இரண்டு தலைவர்கள் சந்திப்பது என்பது ஒளிவுமறைவாகவோ, இரகசியமாகவோ நடத்தப்பட வேண்டியதில்லை என்றும் அந்த மஇகா வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எனவே, அவ்வாறு சந்தித்திருந்தால் சம்பந்தப்பட்ட மஇகா தலைவர்கள் அது குறித்து தயங்காமல் அறிக்கைகள் விடுத்து ஒப்புக் கொண்டிருப்பார்கள் – அவ்வாறு இதுவரை எந்தவித ஒப்புதலும் இல்லாத பட்சத்தில் சந்திப்பு நடந்ததாக கூறப்படுவதில் உண்மையேதும் இல்லை என மஇகா வட்டாரங்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக தமிழ் நாளேடு ஒன்றில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆரூடக் கட்டுரைகளில், இரண்டு உயர்மட்டத் தலைவர்கள் புத்ரா ஜெயாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சந்தித்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்தத் தலைவர்கள் யார் என்பது பெயர் குறிப்பிடப்படவில்லை.
இதுவரை எந்தத் தரப்பில் இருந்தும் அவ்வாறு சந்திப்பு நடந்ததாக ஒப்புதலும் இல்லை – மறுப்பும் இல்லை.
இன்றைய நிலையில் மஇகாவின் உயர்மட்டத் தலைவர்கள் என்றால், அது தேசியத் தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் ஆகிய இருவரைத்தான் குறிக்கும். இவர்களைத் தவிர உயர்மட்டத் தலைவர்கள் என்ற ரீதியில் பார்த்தால் அவர்கள் யாராக இருக்கக் கூடும் என்றும் மஇகா வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
தேசியத் தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் அடுத்த நிலையில் இருக்கும் உயர்மட்டத் தலைவர்கள் என்றால் அது மூன்று உதவித் தலைவர்களான சரவணன், சோதிநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோரைத்தான் குறிக்கும்.
அல்லது இவர்களில் யாராவது இருவர் சந்திப்பு நடத்தினார்களா என்றால் அப்படி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை என்றும் – அப்படி நடப்பதற்கும் வாய்ப்பில்லை – என்றும் மஇகா வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
எதிர்வரும் மே 12ஆம் தேதி மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கு மீண்டும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் அது குறித்து குழப்பமான – திசை மாற்றும் வகையிலேயே – இத்தகைய ஆரூடங்கள் வெளியிடப்படுவதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.