Home நாடு 1எம்டிபி குறித்து அனைத்துலக தணிக்கை நிறுவனம் ஆய்வு செய்யட்டும்: ஹிஷாமுடின்

1எம்டிபி குறித்து அனைத்துலக தணிக்கை நிறுவனம் ஆய்வு செய்யட்டும்: ஹிஷாமுடின்

679
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 11 – அம்னோவின் முக்கியத் தலைவர்கள் பலரும் பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக அறைகூவல்கள் விடுத்து வரும் வேளையில், அம்னோவின் உதவித் தலைவரும் நஜிப்பின் ஒன்றுவிட்ட சகோதரருமான தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் மட்டும் இதுவரை அமைதி காத்து வந்தார்.

Hishamuddin Hussein Onn 300 x 200ஆனால், அவரும் 1எம்டிபி விவகாரத்தில், ‘அனைத்துலக தணிக்கை நிறுவனத்தைக் கொண்டு 1எம்டிபி நிறுவனத்தை தணிக்கை செய்ய வேண்டும்” என வலியுறுத்தி உள்ளதைத் தொடர்ந்து, நஜிப்பின் தலைமைத்துவம் தற்போது மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலுக்கு நிகரானது போல் தோன்றுகின்றது.

1எம்டிபி தொடங்கப்பட்டது முதல் இதுநாள் வரையிலான அதன் சொத்துக்கள், கடன்கள் மட்டுமல்லாமல், அந்நிறுவனத்தின் அனைத்துவித பரிமாற்றங்கள் குறித்தும் அத்தணிக்கை நிறுவனம் ஆய்வு நடத்த வேண்டும் என ஹிஷாமுடின் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் அந்நிறுவனத்துக்கும் தபோங் ஹாஜி நிறுவனத்துக்கும் இடையேயான 188.5 மில்லியன் ரிங்கிட் நிலப் பரிவர்த்தனை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும் என்றார் அவர்.

“பொதுக் கணக்காய்வாளர் (ஆடிட்டர் ஜெனரல்) அறிக்கைக்காக நாம் காத்திருக்கக் கூடாது. மாறாக 1எம்டிபியின் நிதி நிலவரம் குறித்து அறிவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்,” என்றார் ஹிஷாமுடின்.

ஹிஷாமுடின் துணைப் பிரதமரா?

ஹிஷாமுடினின் இந்தக் கருத்து மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. காரணம் நஜிப் பதவி விலகும் சூழ்நிலை ஏற்படுமேயானால், மொய்தீன் யாசின் பிரதமராகவும், நஜிப்பின் ஆதரவாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சாந்தப்படுத்தும் நோக்கில் ஹிஷாமுடின் துணைப் பிரதமராக நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் அம்னோவில் பரவலாக நிலவி வருகின்றன.

இதனால், தற்போது ஹிஷாமுடினும் மொய்தீனுடன் இணைந்து கொள்வதைப் போன்ற தோற்றத்தை அவரது நேற்றைய அறிக்கை ஏற்படுத்தியுள்ளதால், இனி நஜிப்பின் தலைமைத்துவம் நீண்டகாலத்திற்கு நீடிக்காது எனத் தெரிகின்றது.

நஜிப்பின் தாயாரும், ஹிஷாமுடினின் தாயாரும் உடன்பிறந்த சகோதரிகள் என்பது இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கது.

துணைப் பிரதமருடன் உடன்படும் மசீச

இதற்கிடையே தற்போது காலம் மாறிவிட்டது என்றும், தேசிய விவகாரங்களில் மக்கள் தீவிர கவனம் செலுத்துகிறார்கள் என்றும் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் தெரிவித்துள்ள கருத்துக்களுடன் தாமும் உடன்படுவதாக மசீச தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஓங் கா சுவான் தெரிவித்துள்ளார்.

மற்றொரு மசீச அமைச்சரான டாக்டர் வீ கா சியோங் 1எம்டிபி – தபோங் ஹாஜி நில விவகாரம் அமைச்சரவையின் பார்வைக்குக் கொண்டுவரப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். வீ பிரதமர் துறை அமைச்சராவார்.

1எம்டிபி மற்றும் ஜிஎஸ்டி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தேசிய முன்னணி பதிலளிக்க தவறியதும் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் அது தோல்வியடைய ஒரு காரணம் என கடந்த வெள்ளிக்கிழமையன்று மொய்தீன் தெரிவித்திருந்தார்.