கோலாலம்பூர், மே 13 – 2013-ஆம் ஆண்டு மத்திய செயலவை இனி மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்துவது உட்பட தனது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என மஇகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்துள்ளார்.
மஇகா கிளைத் தலைவர்கள் அனைவருக்கும் நேற்று மாலை குறுஞ்செய்தி மூலமாக பழனிவேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், வரும் மே 27-ம் தேதி முழு விசாரணை நடைபெறும் வரை ஆர்.ஓ.எஸ் வெளியிட்ட அனைத்து கடிதங்களும் செல்லுபடியாகாது என உத்தரவிட்டுள்ளதாகவும், தனது குறுந்தகவலில் பழனிவேல் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கோலாலாம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி, இன்னும் ஒரு வாரத்தில் அனைத்துத் தரப்புகளும் தங்களின் வாதங்களை எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் மே 27ஆம் தேதி தான் அறிவிக்கவிருப்பதாகவும் அறிவித்தார்.
மஇகா கிளைத் தலைவர்களுக்கு பழனிவேல் அனுப்பிய குறுஞ்செய்தி பின்வருமாறு:-
“பேரன்புமிக்க ம.இ.கா. கிளைத் தலைவர்களே… 2013 ஆம் ஆண்டுக்கான மத்திய செயலவை இனி மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்துவது உட்பட தனது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். வரும்27.5.2015ஆம் தேதி முழு விசாரனை நடைபெறும் வரை ஆர்.ஓ.எஸ். வெளியிட்ட அனைத்து கடிதங்களும் செல்லுபடியாகாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்
ம.இ.கா. தேசியத் தலைவர்”