கொழும்பு, மே 13 – தமிழக மீனவர்கள் குழு இலங்கை அதிபர் சிறிசேனாவை கொழும்புவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இலங்கைக்கு சென்றுள்ள தமிழக மீனவர்கள் குழு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா ஆகியோரை சந்தித்தது.
தமிழக, இலங்கை மீனவர்கள் பிரச்சனை குறித்து மீன்பிடித்துறை அமைச்சரிடம் தமிழக குழு மனு அளித்தது. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 37 மீனவர்களையும், சிறைபிடிக்கப்பட்ட 25 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாரம்பரிய கடல் பகுதியில் 3 ஆண்டுகள் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள இழுவலைகளை பாரம்பரிய கடல் பகுதியில் 3 ஆண்டுகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பின்னர் அதிபர் சிறிசேனாவையும், தமிழக மீனவர்கள் குழு சந்தித்துப் பேசினர்.