புதுடெல்லி, மே 14 – ‘இந்தியன் பிரிமீயர் லீக்’ எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்காக 8 அணிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றிலும் பல கோடி ரூபாய் புழக்கத்தில் இருப்பதால், மத்திய அமலாக்கத்துறை அந்த அணிகளை கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கணக்குகளில் பல முறைகேடுகள் நடந்திருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும் பங்கு பரிமாற்றத்தில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் ஷாருக்கானுக்கு மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகம் மனு அனுப்பி உள்ளது.
அதில், ஷாருக்கான் இந்த மாத இறுதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே ஷாருக்கான் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.