மாலத்தீவின் அதிபராக முகமது நஷீத் இருந்தபோது, அந்நாட்டின் குற்றவியல் நீதிபதியாக இருந்த அப்துல்லா முகமது 2012ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார். பின்னர் நடைபெற்ற கிளர்ச்சியைத் தொடர்ந்து, அதிபர் பதவியை விட்டு முகமது நஷீத் விலகினார். நீதிபதியைக் கைது செய்ததை எதிர்த்து அவர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நஷீத்தைக் கைது செய்ய நீதிமன்றம் இரண்டு முறை கைது செய்யும் ஆணையை பிறப்பித்தது.
கைதாவதில் இருந்து தப்பிப்பதற்காக மாலேயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நஷீத் கடந்த மாதம் தஞ்சம் புகுந்தார். பின்னர், இந்திய அரசு மேற்கொண்ட சமரச முயற்சியைத் தொடர்ந்து, அவர் 11 நாள்களுக்குப் பிறகு பிப்ரவரி 23ஆம் தேதி தூதரகத்தில் இருந்து வெளியேறினார்.
தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தன்னைப் போட்டியிட விடாமல் தடுக்கும் அரசியல் சதி என்று அவர் குற்றம் சாட்டினார்.