டெல்லி, மே 15 – சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் நண்பர், ஓட்டுநர் உள்பட மூன்று பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி தங்கும் விடுதியில் இருந்த சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.
சசி தரூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. சசி தரூரின் உதவியாளர் சஞ்சய், நரேன் சிங், ஓட்டுநர் பஜிரங்கி ஆகியோர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கும் சசி தரூருக்கும் இடையேயான பழக்கம் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நிகழ்வுகள் குறித்து அவர்கள் பொய் கூறுவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே மூன்று பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். வரும் 20-ஆம் தேதி அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
அப்போது மூன்று பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோர போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.