Home கலை உலகம் திரைவிமர்சனம்: “36 வயதினிலே” – பெண்களுக்கான புத்துணர்ச்சி!

திரைவிமர்சனம்: “36 வயதினிலே” – பெண்களுக்கான புத்துணர்ச்சி!

696
0
SHARE
Ad

36-Vayathinile-first-look-720x415

கோலாலம்பூர், மே 15 –  “வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் தலை கவிழ்ந்தார்” என்ற பாரதியின் இந்த வரிகள் தான் ’36 வயதினிலே’ படத்தை பார்க்கும் போது நினைவுக்கு வருகின்றது.

தனது உணர்வுகளை மதிக்காமல், வார்த்தைகளால் வலியை தரும் கணவனிடமிருந்து சற்று விலகி தன்னுள் முடங்கிப் போய் கிடக்கும் துணிச்சலைத் தேடுகிறாள் ஒரு பெண்.

#TamilSchoolmychoice

ஹஹா.. என்ன சார் விளையாடுறீங்க? மது, புகை, பார்டி, டூ பீஸ் உடைகள் என சகட்டு மேனிக்கு, ஆண்களுக்கு இணையாக பெண்களும் சுதந்திரத்தை அனுபவித்து வரும் இந்த நவீன காலத்துல, பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டி வைக்க முடியுமா? இப்ப வர படங்கள்ல கூட அப்படி காட்டுறது இல்லையே? என்று கேட்டால், பெண்கள் இன்றைக்கு இவ்வளவு சுதந்திரமாக செயல்படுவதாக சமூக வலைத்தளங்களும், திரைப்படங்களும் படம் பிடித்து காட்டுவது, மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களையே அல்லது மேல்தட்டு வாழ்க்கை வாழ துடிக்கும் பெண்களையே..

ஆனால் அப்பா செலவில் ‘அவரது பாதுகாப்போடு’ இளங்கலையும், முதுகலையும் படித்து முடித்துவிட்டு, அவரது சிபாரிசிலேயே ஒரு அரசாங்க வேலையும் பெற்றுவிட்டு, பல கனவுகளோடும் திட்டங்களோடும் வேலைக்கு போய் முதல் வருடம் முடிவதற்குள், அரசாங்க வேலையில் இருக்கும் ஆண் ஒருவருக்கு கழுத்தை நீட்டி, குடும்ப வாழ்க்கையில் இணைந்து, குழந்தை பெற்று பின்னர் ஓய்வு பெறும் வரை கணவருக்கும், பிள்ளைகளுக்கும் வங்கியில் லோன் வாங்கி கொடுத்தே ஓய்ந்து போகும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களின் நிலை?

இந்த கேள்விக்கான பதில் தான் ’36 வயதினிலே’. அப்படிப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களில் ஒருவர் தான் வசந்தி தமிழ்செல்வன்.

பிள்ளைங்க ரெண்டு பேரும் வளர்ந்திட்டாங்க, இனி அழகும், நல்ல நடிப்புத் திறமையும் வாய்ந்த தன் மனைவியை வீட்டுக்குள்ளே பூட்டி வைக்க தான் விந்தை மனிதர் கிடையாது என்பதை நிரூபிக்கும் விதமாக, நடிகர் சூர்யா தன் காதல் மனைவி ஜோதிகாவுக்கு அன்புப் பரிசாக தானே இப்படத்தை தயாரித்து அவரை மீண்டும் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

சுமார் 8 ஆண்டுகள் அக்மார்க் குடும்ப பெண்ணாக வாழ்ந்துவிட்ட ஜோதிகா, மீண்டும் நடிக்க வந்தாலும், இன்னும் அதே துறுதுறுப்புடன் இருக்கிறார். ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தை ரோஷன் ஆண்ட்ரியோஸ் இயக்கியிருக்கிறார்.

கதைச் சுருக்கம்

jo 1

அரசாங்க வேலையில் இருக்கும் குடும்பப் பெண்ணான வசந்தி (ஜோதிகா), அயர்லாந்து போவதை தங்கள் கனவாகக் கொண்டிருக்கும் தன் கணவருக்கும், 13 வயது மகளுக்கும் இடையில் பாசப் போராட்டத்தில் தவிக்கிறார்.

மனைவியின் வேலை, கனவு, ஆசைகள் என எதிலும் அக்கறையின்றி, தனது சுயநலத்திற்காக மட்டுமே வசந்தியை பயன்படுத்திக் கொள்கிறார் தமிழ்ச்செல்வன்.

மனைவியின் கனவுகளை முடக்கும் அதே நேரத்தில், மகள் நாலு சுவற்றிற்குள் முடங்கிவிடக்கூடாது என்றும் கவலைப்படுகின்றார்.

ஒரு கட்டத்தில் கணவர், மகள் இருவரும் தன்னை தனியாக விட்டு அயர்லாந்து போக, பிரிவால் வாடும் போது தன்னை உணர்கிறாள். குடும்பத்திற்காக இத்தனை நாட்கள் கனவை எல்லாம் தியாகம் செய்தோம் ஆனால் அதை அவர்கள் பொருட்டாக மதிக்கவில்லையே என்று உணர்ந்து அந்த 36 வயதில் தன்னை கண்டெடுக்கிறாள்.

நடிப்பு

jyothika-stills-from-36-vayathinile-movie_142779226200

“வாடி ராசாத்தி.. புதுசா.. இளசா.. ரவுசா” என்ற பாடலுக்கு ஏற்ப இன்னும் அதே அழகுடன், துடிப்புடன் திரைக்குத் திரும்பியிருக்கிறார் ஜோதிகா.

பஸ்சில் ஏறி அடிச்சு பிடிச்சு சீட் பிடிப்பது, அலுவலகத்தில் சக ஊழியருடன் பனிப்போர், வீட்டில் அவசர அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு மாமியாருடன் டிவி சீரியல் பார்ப்பது என ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணாக தூள் கிளப்பியிருக்கிறார்.

அதேநேரத்தில்,”அவ இன்னொரு வசந்தியா ஆயிடக்கூடாதாம்.அப்படின்னா இவ்வளவு வருசமா நான் என்னவா இருந்தேன்?” என்று தோழியிடம் கதறும் காட்சிகளிலும் கண் கலங்க வைக்கும் அளவிற்கு நடிப்பில் அவ்வளவு தெளிவும், முதிர்ச்சியும்.

படம் பார்த்துவிட்டு வரும் பொழுது வசந்தி கதாப்பாத்திரத்திற்கு ஜோதிகாவைத் தவிர வேறு யாரையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு காட்சிகளுடன் ஒன்றியிருக்கிறார்.

ரஹ்மான்.. அயர்லாந்து வாய்ப்பு பறிபோய் விடக்கூடாது என்பதற்காக மனைவியையே வழக்கிற்குள் கொண்டு வரத் துணியும் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

“கனவுங்கிறது கண்ண மூடிக்கிட்டா வர்றது இல்லை தெரியுமா?” என்று மனைவியை வறுத்தெடுப்பதும், மனைவியின் பிறந்தநாளைக் கூட மறந்துவிடுவதும், தேவைப்படும் பொழுது நயவஞ்சமாக அன்பைப் பொழிவதுமாக இயல்பாக நடித்திருக்கிறார்.

அதே நேரத்தில் மாமனாராக டெல்லி கணேஷ், மகளாக அமிர்தா, தோழியாக அபிராமி, தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ், மோகன்ராம், இளவரசு என ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ரசிக்க வைக்கும் படியாக படைக்கப்பட்டுள்ளது.

ரசித்தவை

jyothika-stills-from-36-vayathinile-movie_142779226310

ஒரு பெண்ணின் வாழ்க்கையை சொல்லும் படமாக மட்டுமே இதை கொண்டு போகாமல், மொட்டை மாடியில் காய்கறித்தோட்டம் அமைப்பது பற்றியும், காய்கறியில் கலக்கப்படும் பல்வேறு விஷத்தன்மை கொண்ட உரங்கள் பற்றியும் சொல்லி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

இந்தியாவில் குடியரசுத் தலைவர், சாமினியர் ஒருவரைப் பார்க்க விரும்பினால் அந்த சாமானியன் இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டுமா? என்று எண்ணும் அளவிற்கு காட்சிகளில் அவ்வளவு விளக்கம்.

முதற்பாதியில், ஏதோ கொலைக் குற்றவாளியை தேடுவது போல் ஜோதிகாவை போலீஸ் நிழலாகத் தொடர்வதை வைத்து ஆர்வத்தை ஏற்படுத்தியது, பின்னர் ஒரு கேள்வியை வைத்தே திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி, பின்னர் அதற்கான பதிலை முடிவில் சொல்வது என திரைக்கதை வடிவமைப்பு சூப்பர் ரகம்.

விஜியின் வசனத்தில், ஜோதிகாவின் உடல் மொழியில் காட்சிகள் உணர்வுகளை பிரபலிக்கின்றன. “பெண்களின் கனவுகள் எந்த வயதிலும் காலாவதியாவதில்லை”, “பெண்கள் பதிலாக இருப்பதாலேயே கேள்வி கேட்பது ஆணாக இருக்கின்றனர்” “இந்தியாவின் 13 இந்தியக் குடியரசுத்தலைவர்களில் ஒருவர் தான் பெண், 14 பிரதமர்களில் ஒருவர் தான் பெண் அது ஏன்?” என வசனங்கள் ஒவ்வொன்றும் ஊசி முனை போல் கூர்மை.

திவாகரனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலம் சேர்த்திருக்கின்றது.

பெரிய பிரம்மாண்டமான காட்சிகள் இல்லையென்றாலும் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை க்ளோசப்பில் அழகாக படம் பிடித்திருக்கிறார் திவாகரன். குறிப்பாக ஜோதிகா வண்ண வண்ண புடவையில் அழகாக மிடுக்காக நடந்து வருவதை காட்டி ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறார்.

‘ஜோதிகா புடவை’ என்ற பேஷன் உருவாகி இனி ஆங்காங்கே பெண்கள் அழகழகான புடைவைகளில் சாலையில் வலம் வருவார்களேயானால் அந்த பெருமை திவாகரனை சேரட்டும்.

அதே நேரத்தில் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும், பாடல்களும் அருமை.

காதல், அடிதடி, கொலை, கொள்ளை, ரத்தம் என வெளிவரும் பெரும்பாலான படங்கள் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடியாமல் போய்விட்ட நிலையில், இது போன்ற நல்ல கருத்தோடு குடும்பப் படங்கள் அத்தி பூத்தார் போல தான் வருகின்றன.

அப்பா, அம்மா, மகள், மகன், மாமனார், மாமியார் என ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள நிறைய கருத்துகளை சொல்லும் ’36 வயதினிலே’ குடும்பத்துடன் திரையரங்கு சென்று பார்க்க வேண்டிய அற்புதமான படம்.

’36 வயதினிலே’ – பெண்களுக்கான புத்துணர்ச்சி டானிக்!

– ஃபீனிக்ஸ்தாசன்