ஜோத்பூர், மே 15 – மான் வேட்டியாடியது தொடர்பான வழக்கில் 5 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வலியுறுத்தி, சல்மான் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், கடந்த 1998-ஆம் ஆண்டு, அக்டோபர் 1-ஆம் தேதி, அரிய வகை மானை வேட்டையாடியதாக, இந்தி நடிகர் சல்மான் கான் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜோத்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில், நேரில் கண்ட 5 சாட்சிகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், மீண்டும் அவர்களை குறுக்கு விசாரணை செய்வதற்காக, சல்மான்கான் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை, ஜோத்பூர் அமர்வு நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார், கடந்த வாரம் விசாரித்து முடித்தார்.
இந்த நிலையில், நேற்று சல்மான்கான் தரப்பு கோரிக்கையை நிராகரித்து, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சல்மான் தரப்பு வழக்கறிஞர் சரஸ்வத் கூறியுள்ளார்.