கோலாலம்பூர், மே 16 – இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் எல்லாம் சமுதாய செய்திகளும், சமூகப் போராளிகள் குறித்த பார்வைகளும், பொதுவுடமைக் கருத்துகளும் சற்று அளவுக்கதிகமாகவே இருக்கும் என்பது தெரிந்ததுதான். அவரது முந்தைய இயற்கை, ஈ, பேராண்மை படங்களிலும் இதே நிலைமைதான்.
ஆனால், நீண்ட நாளாகத் தயாரிப்பில் இருந்து வந்த ‘புறம்போக்கு’ (அந்தப் பெயரைப் படத்திற்கு ஏன் வைத்தார்கள் என்பது தெரியவில்லை) சிறந்த நடிகர்களின் பங்களிப்பு இருந்தும், படம் முழுக்க நம்மால் தாங்க முடியாமல் திணறும் அளவுக்கு – சில கட்டங்களில் தியேட்டரை விட்டே ஓடி விடலாமா என்னும் அளவுக்கு ஒரே பிரச்சார நெடி.
அதுவும் தூக்குத் தண்டனை பற்றிய பிரச்சாரம். தமிழகத்தில் நீண்ட காலமாக தூக்குத் தண்டனைக் கைதிகளாகப் போராடி வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் விவகாரம், அண்மையில் இந்தோனேசியாவில் நிகழ்ந்த போதைப்பொருள் கடத்தலுக்கான தூக்குத் தண்டனை என –
காலத்துக்கு ஏற்ற விஷயத்தைத்தான் கதைக்குள் கொண்டு வந்திருக்கின்றார் இயக்குநர் என ஒரு கணம் பாராட்டத் தோன்றினாலும், கவலையை மறக்க, பொழுதுபோக்காகத் திரையரங்கு வருபவர்களுக்கு, மரணத்தைப் பற்றியும், தூக்குத் தண்டனையைப் பற்றியும், இத்தனை விலாவாரியாக, திகட்டத் திகட்ட, திணறத் திணற பிரச்சாரத்தைத் திணிக்க வேண்டுமா?
தூக்குத் தண்டனையைப் பற்றி படம் எடுக்கின்றேன் என்று நமக்கும் தண்டனை தர வேண்டுமா?
கதை
தூக்குத் தண்டனை கைதியாக அறிமுகமாகின்றார் ஆர்யா. நக்சல்வாதியாக பல இடங்களில் வெடிகுண்டுகள் வைத்தார், இராணுவத்தினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினார் எனக் குற்றம் சுமத்தி அவருக்கு தூக்குத் தண்டனையை நிர்ணயிக்கின்றார்கள்.
அவரை எப்படித் தூக்கிலிட வேண்டும் எனத் தனது தீர்ப்பில் விவரமாக விவரிக்கின்றார் நீதிபதி. பின்னர் ஆர்யாவைத் தூக்கில் போடுவதற்குப் பொருத்தமான ஒரு நபரைத் தேடும் காவல் துறைக்குக் கிடைப்பவர் எப்போதும் குடிபோதையில் மிதக்கும் விஜய் சேதுபதி. படத்தில் அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயரும் வெகுபொருத்தம். எமலிங்கம் என்பதுதான் அவரது பெயர்.
இந்தத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற கடமை தவறாத – சட்டம் சொல்வதை சரியா தப்பா என விவாதிக்காமல் – நடவடிக்கையில் மட்டும் இறங்கும் காவல் துறை அதிகாரியாக ஷாம் வருகின்றார்.
இதற்கிடையில், ஆர்யாவை அதிரடியாகக் காப்பாற்ற திட்டம் போடுகின்றனர் சிறைக்கு வெளியே இருக்கும் ஆர்யாவின் குழுவினர். அதில் ஆர்யாவின் காதலி கார்த்திகாவும் அடக்கம்.
ஒரு கட்டத்தில் இவர்களோடு இணைந்து ஒத்துழைக்கவும், ஆர்யாவைக் காப்பாற்றவும் ஒப்புக் கொண்டு செயலில் இறங்குகின்றார் விஜய் சேதுபதி.
இந்த முடிச்சுகளோடு தொடங்கும் படம் – எப்படி அதிரடியாக – பரபரப்பாக திரைக்கதையில் இயங்கி இருக்க வேண்டும்? ஆனால் சொதப்பி விட்டார்கள்.
படம் முழுக்க தூக்குத் தண்டனை பற்றிய பிரச்சார நெடி.
நகைச்சுவை என்று எதுவுமில்லை. காதலுக்கும் இடமில்லை – ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர!
இறுதியில் ஆர்யாவைத் தூக்கில் போட்டார்களா இல்லையா என்பதுதான் கதை. முடிவைப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் விஜய் சேதுபதி
சரிசமமான போட்டியாக இரண்டு முக்கிய, பிரபல நடிகர்கள் இருந்தும் படம் முழுக்க தனது உடல் மொழியாலும், வசனங்களை உச்சரிக்கும் பாங்கிலும் நம்மை ரசிக்க வைப்பவர் விஜய் சேதுபதிதான்.
அவருடைய காட்சிகளால்தான் படத்தை உட்கார்ந்து ஓரளவுக்காவது ரசிக்க முடிகின்றது.
இல்லாவிட்டால், ஆர்யாவில் இறுகிய முகம், ஷாம்மின் மிடுக்கான யாருடனும் சமரசம் செய்து கொள்ளாத கடுமையான காவல் துறை அதிகாரி பாத்திரம் – சிறைச்சாலை – கைதிகள் – தூக்குத் தண்டனையைப் பற்றிய எதிரும் புதிருமான கருத்துகள் – இவைதான் படத்தை முழுக்க, முழுக்க ஆக்கிரமித்து நம்மை சலிப்படைய வைத்திருக்கின்றன.
தனக்கே உரிய பாணியில், சென்னைத் தமிழை உச்சரித்து, பல இடங்களில் கவர்கின்றார் சேதுபதி.
ஆர்யாவும், ஷாம்மும் தங்களின் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கின்றார்கள் என்றாலும், சேதுபதி அளவுக்கு அவர்களால் கவர முடியவில்லை. இங்குதான் சேதுபதியின் கூடுதல் உழைப்பு கண்ணுக்குத் தெரிகின்றது.
தரமான, துல்லியமான ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்திருக்கும் மற்றொரு பலம். ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரத்திற்குப் பாராட்டுகள். ஆனால், படத்தை பிரம்மாண்டமாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே தேவையில்லாத பல காட்சிகள் இடம் பெறுகின்றன.
படத்தின் தயாரிப்பாளர் தாராளமாக செலவு செய்ய முன்வந்திருப்பார் போலும். தேவையில்லாமல், திரைக்கதைக்குள், ரயிலையும், ஹெலிகாப்டரையும் கொண்டு வந்து தயாரிப்பு செலவுகளை ஏற்றி வைத்திருக்கின்றார்கள்.
படத்தைப் பரபரப்பாக்கக் கூடிய எத்தனையோ அம்சங்கள் இருந்து அவற்றில் கவனம் செலுத்தாமல், பனிபடர்ந்த மலைகளைக் காட்டுவதிலும், அந்த மலைப் பாதைகளில் வாகனங்களில் போவதையும், பாலைவனத்தில் தேவையில்லாமல் வரிசையாக ஒட்டகங்களை வரிசையில் நிற்க வைத்துக் காட்டுவதிலும் மெனக்கெட்டிருக்கின்றார் இயக்குநர்.
இருப்பினும் சிறைச்சாலை காட்சிகள் பிரம்மாண்டமாகவும், கதைக்குப் பொருத்தமாகவும், மிகவும் தத்ரூபமாகவும் படமாக்கப்பட்டிருக்கின்றன.
பலவீனங்கள்
ஸ்ரீகாந்த் தேவா, வர்ஷன் என இருவரின் இசைக் கோர்ப்பில் பாடல்களும் அவ்வளவாக எடுபடவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்
கதாநாயகி கார்த்திகாவுக்கும் அவ்வளவாக வேலை இல்லை.
சில இடங்களில், இது சினிமாப் படமா அல்லது தவறிப் போய் தூக்குத் தண்டனை பற்றிய ஆவணப் படத்தை (டாக்குமெண்டரி) பார்த்துக் கொண்டிருக்கிறோமா என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய அளவுக்கு பிரச்சாரம் செய்திருக்கின்றார்கள்.
இடையிடையே கம்யூனிச மற்றும் பொதுவுடமைக் கருத்துகளின் தெளிப்புகள் வேறு. அவையும் கதையோடு ஒட்டாமல் வேண்டுமென்றே திணிக்கப்பட்டதுபோல் தெரிகின்றது.
மொத்தத்தில்,
விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம் என மூன்று முக்கிய பிரபலங்கள் – கதாநாயகியாக கார்த்திகா – இவ்வளவு பேர் இருந்தும்,
தூக்குத் தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் கைதி, அவனைக் காப்பாற்றும் முயற்சியில் அவனது தீவிரவாதக் குழு – என படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கக் கூடிய அம்சங்கள் இருந்தும், பொதுவுடமைக் கொள்கைகள், தூக்குத் தண்டனை வேண்டுமா என்ற பிரச்சாரம் போன்ற தனது சொந்தக் கருத்துக்களை வேண்டுமென்றே படத்துக்குள் திணித்ததன் மூலம்,
நன்றாக வந்திருக்கக் கூடிய ஒரு படத்தை இயக்குநர் எப்படியெல்லாம் சொதப்பலாம் என்பதற்கு உதாரணம் ‘புறம்போக்கு’
-இரா.முத்தரசன்