நியூ யார்க், மே 17 – பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் விமர்சனத்திற்குள்ளாவதில் யாரும் விதிவிலக்கல்ல என்பதை இந்திய இணையவாசிகள் மீண்டும் நிரூபித்துள்ளனர். இந்த முறை இந்திய பேஸ்புக் வாசிகளின் விமர்சனத்திற்கும், கடும் கோபத்திற்கு ஆளானவர் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தான்.
இந்தியாவில் ‘இண்டெர்நெட்.ஆர்க் செர்வீஸ்’ (Internet.org service) திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்துடனும், அந்த திட்டத்தில் இணைந்த மலாவி எனும் நிறுவனத்தை பிரபலப்படுத்தவும், சக்கர்பெர்க் தனது பதிவில் இந்தியாவின் வரைபடத்தை வெளியிட்டார். இங்கு தான் பிரச்சனை ஆரம்பமானது. அவர் வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நீக்கப்பட்டு இருந்தது.
இதனால் கடும் கோபமுற்ற இந்திய இணையவாசிகள், மார்க்கை திட்டித் தீர்த்துவிட்டனர். மேலும் அவர்கள், இந்திய அரசு பேஸ்புக்கை தடை செய்ய வேண்டும். இண்டெர்நெட்.ஆர்க் திட்டத்தை முடக்க வேண்டும் என்றும் பதிவுகளை வெளியிட்டனர். இதனால் சற்றே அதிர்ச்சியுற்ற மார்க் சக்கர்பெர்க், தனது பதிவில் தவறாக வெளியிட்ட இந்திய வரைபடத்தை உடனடியாக நீக்கினார்.