நியூ யார்க், மே 17 – விண்டோஸ் ‘பைரேட்’ (Pirate) பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும், விண்டோஸ் 10 இயங்குதளம் இலவசமாக வழங்கப்படும் என ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், ‘பைரேட்’ பதிப்புகளை வைத்திருப்பவர்கள் விண்டோஸ் 10-ஐ இலவசமாக மேம்படுத்த முடியாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 8 இயங்குதளத்தின் வர்த்தக பாதிப்பிற்குப் பிறகு, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழலில் உருவாக்கி வரும் இயங்குதளம் தான் விண்டோஸ் 10. திறன்பேசி முதல் கணினி வரை அனைத்திற்கும் பொதுவானதாக உருவாகி வரும் இந்த இயங்குதளம் அனைவருக்கும் இலவசமாக மேம்படுத்தப்படும் என்று ஆருடங்கள் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி டெர்ரி மையர்சன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பைரேட் பதிப்புகளை நாங்கள் ஊக்குவிப்பதில்லை. அவற்றால் தான் அதிக அளவில் மால்வேர் மற்றும் தகவல் திருட்டுகள் நடைபெறுகின்றன. எனவே, ‘பைரேட்’ பதிப்புகளுக்கு விண்டோஸ் 10 இலவச மேம்பாடு கிடையாது.”
“பைரேட் பதிப்புகளை மேம்படுத்தும் பயனர்களின் இயங்கு தளங்களில் பிரத்யேக குறியீடு ஒன்று இருக்கும். அதுமட்டுமல்லாமல், அத்தகைய பதிப்புகளுக்கு எந்தவித புதிய சேவைகளும், மேம்பாடுகளும் கிடையாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.