மிரி, மே 17 – சரவாக் மாநிலத்தில் உள்ள மிரி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் மைக்கேல் தியோ யு கெங் (படம்) தனது மருத்துவனை (கிளினிக்) வாசலில் வைத்து மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை காலை சுமார் 8.30 மணியளவில் இச்சம்பவம் நடந்தேறியது. இதில்
அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
மிரி தொகுதி பிகேஆர் தலைவருமான டாக்டர் தியோ, கார் நிறுத்துமிடத்தில் இருந்து தனது கிளினிக் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிரி சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் அவரது கிளினிக் அமைந்துள்ளது.
டாக்டர் தியோ நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு காரிலிருந்து திடீரென வெளிப்பட்ட மர்ம நபர், கிரிக்கெட் மட்டையைப் போன்ற ஒரு பொருளைக் கொண்டு அவரைத் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் விவரித்தார்.
தாக்கிய பின்னர் மர்ம நபர் தப்பிச் சென்ற காரில் கார் அடையாள எண் எதுவும் இல்லை என்றும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மைக்கல் தியோ டியோ பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.
காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.