கோலாலம்பூர், மே 21 – பிரதமர் நஜிப்பிற்கும், முன்னாள் பிரதமர் மகாதீருக்கும் இடையே இருந்து வரும் நீண்ட நாள் பிரச்சனைக்கான காரணம் தற்போது அப்பட்டமாக வெளியே தெரிவதாக ‘தி நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ செய்தி நிறுவனத்தின் அரசியல் பிரிவு முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஃபிர்டாவுஸ் அப்துல்லா தனது அப்பனாமா வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மொகிதின் யாசின் பிரதமராகப் பதவி ஏற்றால், யார் அவருக்கு துணைப்பிரதமராக பதவி வகிப்பது என்பதை அம்னோவும், மொகிதினும் முடிவு செய்தால் தான் இந்த பிரச்சனை தீரும் என்றும் ஃபிர்டாவுஸ் தெரிவித்துள்ளார்.
இதை தான் மொகிதின் யாசினும் எண்ணிக்கொண்டிருப்பதாகவும், 1எம்டிபி விவகாரத்தில் கட்சிக்காகவும், அரசாங்கத்திற்காகவும், நாட்டிற்காகவும் உடனடியாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் முடிவு செய்துள்ளார் என்றும் ஃபிர்டாவுஸ் தெரிவித்துள்ளார்.
“உயர் பதவியில் உள்ள அரசாங்க அதிகாரிகள், அம்னோ தலைவர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட 1எம்டிபி உறுப்பினர்கள் முன்னிலையில் துணைப்பிரதமர் தெளிவாக அறிவித்துவிட்டார். ஒட்டுமொத்த 1எம்டிபி வாரியம் நீக்கப்பட்டு, இந்த விவகாரத்தில் அவர்களின் பங்கு என்னவென்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்” என்றும் ஃபிர்டாவுஸ் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பிரச்சனையைத் தீர்த்து வைக்க முயற்சி செய்கின்றார் என்பதை அரசாங்கத்தில் உள்ள உயர்மட்டத் தலைவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். அதனால் இன்னும் நம்பிக்கை இருப்பதாகவே தோன்றுகின்றது (மொகிதின் யாசின் பொறுப்பேற்பது) என்றும் ஃபிர்டாவுஸ் தனது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமரும், 1எம்டிபி ஆலோசகருமான நஜிப் துன் ரசாக்கிற்கு தற்போது வேறு வழியே இல்லை என்றும், அவர் உண்மையாகவே கட்சியையும், தேசிய முன்னணியையும், இந்த நாட்டையும் நேசிப்பதாக இருந்தால், தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தான் நம்புவதாகவும் ஃபிர்டாவுஸ் தெரிவித்துள்ளார்.
மகாதீர், காரணமில்லாமல் கடும் விமர்சனங்களை செய்து வருவதாக நினைப்பவர்கள் உடனடியாக இன்னொரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும், “இது ஒரு மிகப் பெரிய கடன் பிரச்சனை. நம்முடைய சக்திக்கு மீறிய ஒன்று. நம்மை தொடர்ந்து கீழே தள்ளும் விவகாரம்”
“மகாதீரின் விமர்சனத்தையே முன்வைக்கும் டிவி3 மற்றும் மற்றவர்கள் உடனடியாக அவர்கள் செய்து கொண்டிருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்களால் இனி தொடர்ந்து அந்த நிலைப்பாட்டில் இருக்க முடியாது” என்றும் ஃபிர்டாவுஸ் குறிப்பிட்டுள்ளார் என எப்எம்டி தெரிவித்துள்ளது.