கோலாலம்பூர், மே 23 – செல்பேசிகள் தயாரிப்பில் முன்னணியில் இருந்த ‘பிளாக்பெர்ரி’ (BlackBerry) நிறுவனம், கடந்த 2013-2014 ம் நிதி ஆண்டில் பெரும் வர்த்தக சரிவை சந்திக்கத் தொடங்கியது. செல்பேசிகளின் ஆரம்பக் காலங்களில் அந்தஸ்த்தின் அடையாளமாகத் தெரிந்த பிளாக் பெர்ரி, ஐஒஎஸ் மற்றும் அண்டிரொய்டு திறன்பேசிகளின் வருகையால் நஷ்டப்பாதைக்குத் திரும்பியது.
அதன் பின்னர் அந்நிறுவனத்தை அதன் தலைவர் ஜான் சென் பல்வேறு கடின முயற்சிகளின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், அந்நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட் மற்றும் சீன நிறுவனமான சியாவுமியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
சியாவுமி நிறுவனம், சீனா அல்லாமல் இந்தியாவில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பெற்றுவிட்டது. அந்நிறுவனம் அடுத்த கட்டமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளை குறி வைத்து வருகின்றது. சியாவுமி தரமான தயாரிப்புகளை வெளியிட்டாலும், சீன நிறுவனம் என்ற பெயர் பெற்றுள்ளதால் தனது அடயாளத்தை மாற்றுவதற்காக கனடா நிறுவனமான பிளாக்பெர்ரியை வாங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனமும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பிளாக்பெர்ரியை தனது விண்டோஸ் தளங்களுடன் இணைத்துக் கொள்ள பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.