கோலாலம்பூர், மே 23 – 1எம்டிபி வாரிய உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் பேசியது காணொளியாக எப்படி வெளியானது? என்று உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமிடி விசாரணை நடத்துவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதை அவரது ஊடகச் செயலர் டத்தோ ஃபட்ஸ்லெட் ஓத்மான் உறுதி செய்துள்ளார். இந்தக் காணொளி வெளியானது குறித்து விசாரணை நடத்த சாஹிட் ஹமிடி உத்தரவிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அன்று அம்னோவுடன் தொடர்புடைய பல்வேறு வலைப் பக்கங்களில் செய்தி வெளியானது.
மேலும் குறிப்பிட்ட அம்னோ கிளையின் துணைத் தலைவர் ஒருவர் மூலமாகவே இந்த காணொளி பரவியதாக வாட்ஸ் அப் தகவல்களை மேற்கோள் காட்டி இந்த வலைப் பக்கங்கள் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தன.
“அந்த அம்னோ பிரமுகர் தாம் பதிவு செய்த காணொளியை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதையடுத்து கட்சியின் நற்பெயருக்கு ஊறு விளைவித்த இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சாஹிட் உத்தரவிட்டார். இனி அம்னோ பயிற்சிக் கூட்டங்களில் கைபேசிகள் மற்றும் இதர பதிவுக் கருவிகள் தடை செய்யப்படும்,” என அந்த வாட்ஸ் அப் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1எம்டிபி வாரிய உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன், மூடப்பட்ட அரங்குக்குள் நடைபெற்ற அம்னோ நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். அவரது இந்த உரை அபனாமா (Apanama) என்ற வலைதளத்தில் வெளியானதை அடுத்து அம்னோ வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அம்னோ பிரமுகர் கூட்டரசு பிரதேச அம்னோ உறுப்பினர் என்று கூறப்படுகிறது. காணொளிப் பதிவை வெளியிட்டது குறித்த குற்றச்சாட்டை அவர் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை என்றும் கூறப்படுகிறது.