சென்னை,மே23-பரபரப்பிற்குப் பேர் போனவர் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.அவர் எங்கு சென்றாலும், அவர் பின்னாலேயே பரபரப்பும் பின் தொடர்ந்து வந்து விடுகிறது.அப்படித்தான் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிலும் கடைசி நேரத்தில் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
ஆரம்பத்தில் ஜெயலலிதாவிற்கும் ரஜினிக்கும் இடையே சுமூகமான உறவு இருந்ததில்லை.ஒருவிதமான பனிப்போரே இருவருக்கும் இடையே நடந்து வந்தது என்று கூட கூறலாம்.ஆனால்,காலப்போக்கில் அது மறைந்து இப்போது சுமூகமான உறவு நிலவுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்த போது,முதல் ஆளாய் வாழ்த்துச் சொன்னவர் ரஜினிகாந்த்.
அதற்கடுத்து,இன்று ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிலும் ஆர்வத்தோடு வந்து கலந்து கொண்டார் ரஜினிகாந்த்.அவருக்கு அருகில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அமர்ந்திருந்தார்.சரத்குமாருடன் தம்படம் எடுத்துத் தமது உற்சாகத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல்,நிகழ்ச்சி முழுவதையும் சிரித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
விழா முடிந்ததும் ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாகக் கூட்டம் அவரைத் தான் மொய்த்துக் கொண்டு கை குலுக்கவும்,புகைப்படம் எடுக்கவும் முண்டியடித்தது.எல்லாவற்றையும் தாண்டி,ஜெயலலிதாவுக்காகத் தனது எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்த ஆர்.கே.நகர் தொகுதியின் வெற்றிவேல் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதிமுக ஆதரவு நடிகர்களாகிய ராமராஜன்,குண்டுகல்யாணம் போன்ற பலரும் வந்து அவரை வணங்கிக் கைகுலுக்கியதால் கிட்டத்தட்ட அவர்’இரண்டாவது ஜெயலலிதா’ போலவே அங்கு மாறிவிட்டார்.பின்பு,பாதுகாவலர்கள் அவரை மிகவும் சிரமப்பட்டே கூட்டத்திலிருந்து மீட்டு வெளியே அழைத்துச் சென்றனர்.
(ரஜினிகாந்த்-சரத்குமார் தம்படம்)