Home நாடு “எனது கணவருக்கு நேரமில்லை” – கனகம் பழனிவேல் உரையால் மஇகாவில் விவாதங்கள்-சர்ச்சைகள்!

“எனது கணவருக்கு நேரமில்லை” – கனகம் பழனிவேல் உரையால் மஇகாவில் விவாதங்கள்-சர்ச்சைகள்!

789
0
SHARE
Ad

unnamed (1)கோலாலம்பூர், மே 26 – இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றுவதற்காக திட்டவரைவு (Blueprint) ஒன்றைத் தயாரிப்பதற்காக கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கமும் அங்கு அரங்கேறிய சில உரைகளும், சம்பவங்களும் இந்திய சமுதாயத்திலும், மஇகாவிலும் பலத்த சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் வித்திட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 24ஆம் தேதி தலைநகரின் பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்ற மலேசிய இந்தியர்களுக்கான திட்டவரைவு தயாரிப்பு (Malaysian Indian Blueprint development) மீதிலான கருத்தரங்கிற்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்ட போதே சர்ச்சைகளும், கேள்விகளும் உடன் எழுந்தன.

தனியார் நிறுவனத்தின் ஏற்பாடு 

#TamilSchoolmychoice

unnamed

காரணம், 11வது மலேசியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த முக்கிய காலகட்டத்தில், வழக்கமாக மஇகா மட்டுமே தயாரித்து வழங்கும் திட்டவரைவைத் தயாரிக்க யார் அக்கறையோடு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது.

காரணம், கருத்தரங்கை ஏற்பாடு செய்தது, அழைப்பிதழ்கள் அனுப்பியது எல்லாம் – “ஹியுமன் கேப்பிட்டல் குரூப் ஆசியா லிமிடெட்” (Human Capital Group Asia Limited) என்ற தனியார் ஆலோசனை நிறுவனம். யாருக்காக இந்த கருத்தரங்களை நாங்கள் ஏற்பாடு செய்கின்றோம் என்ற விவரத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தலைநகரில் ஓர் உயர்ரக தங்கும் விடுதியான ஷெராட்டனில் கடந்த மே 24ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் சுமார் 250 பேர் கலந்து கொண்டிருந்தனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த கருத்தரங்கை முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தவர்கள் பழனிவேலுவின் ஆதரவாளர்கள்தான். துணைத் தலைவர் டாக்டர் சுப்ரா சார்பான யாருமே அழைக்கப்படவில்லை.

இந்தியர் சமுதாயத்தின் பிரச்சனைகளுக்காக அனைவரும் ஒன்று கூடி நடத்தவேண்டிய கருத்தரங்கை ஒரு சார்பு குழுவினர் மட்டும் நடத்தியது பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்துள்ளது என்பதோடு, அந்த கருத்தரங்கில் பழனிவேலுவின் துணைவியார் டத்தின்ஸ்ரீ கனகம் பழனிவேல் நிகழ்த்திய உரையும் பரவலான சர்ச்சைகளைத் தொடக்கி வைத்துள்ளது.

கனகம் பழனிவேல் கூறியது என்ன?

கருத்தரங்கில் உரையாற்றிய கனகம் பழனிவேல், “எனது கணவருக்கு நேரமில்லாமல் பிசியாக இருக்கின்றார். எனவேதான் இந்த கருத்தரங்கை முன்னின்று நடத்த நானே முன்வந்தேன்” என்று கூறியிருக்கின்றார்.

அடுத்ததாக, தான் உட்பட கீழ்க்காண்பவர்களையும் உள்ளடக்கிய ஏழு பேர் கொண்ட குழுவினர் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருப்பதாக கனகம் அறிவித்தார்.

1.பி.கணேசன் (காப்பார் மஇகா தொகுதித் தலைவர் – மஇகாவின் அங்கமான ஒய்எஸ்எஸ் (YSS –Yayasan Strategic Social) நிறுவனத்தின் தலைமை அதிகாரி)

2.கே.இராமலிங்கம் (பத்து தொகுதி மஇகா தலைவர்)

3.அன்புமணி பாலன் (பழனிவேலுவின் அரசியல் செயலாளர்)

4.மொட்டையன் மனோகரன் (பொருளாதார நிபுணர்)

5.தயாளன்

6.ரோன் ராஜன்

இந்த ஏழு பேர் கொண்ட குழுவினருக்குப் பின்னணியில் 30 பேர் கொண்ட குழு ஒன்று செயல்படும் என்றும் கனகம் தெரிவித்திருக்கின்றார்.

unnamed (2)

(கருத்தரங்கின் தொடக்கத்தில் உரையாற்றிய பழனிவேல் பின்னர் ஒரு திருமணத்திற்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றுவிட்டார். சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே அவர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளார். படங்கள்: வாட்ஸ்அப்)

வழக்கமாக மஇகாவே முன்னின்று நடத்தும் இதுபோன்ற கருத்தரங்கை இந்தமுறை நடத்தாமல் மஇகா தலைமைத்துவம் ஒதுங்கிக் கொண்டது, பழனிவேலுவுக்கு நேரமில்லாத காரணத்தால் அவரது மனைவி நடத்துவது, டாக்டர் சுப்ரா ஆதரவாளர்களும், மஇகாவின் மற்ற முக்கியப் புள்ளிகளும் புறக்கணிக்கப்பட்டது, அறிவிக்கப்பட்ட குழுவில் உள்ளவர்களின் அரசியல் பின்னணி இப்படி எல்லாம் ஒன்று சேர்ந்துதான் கட்சியில் பல்வேறு விவாதங்களும் சர்ச்சைகளும் தற்போது புயலெனப் புறப்பட்டுக் கிளம்பியுள்ளன,

கருத்தரங்கம் – அரசியல் பின்னணியா?

s-subramaniam1-020713_484_321_100இந்த கருத்தரங்கம் அரசியல் பின்னணியோடு நடத்தப்படுவது என மஇகா தேசியத் துணைத்தலைவர் டாக்டர் சுப்ரா கண்டனம் தெரிவித்துள்ளார் (பார்க்க தனிச் செய்தி).

இந்தக் கருத்தரங்கம் அடுத்ததாக, மத்திய வட்டாரம், தென் வட்டாரம், வடக்கு வட்டாரம் என மூன்றாக பிரிக்கப்பட்டு விரிவாக்கப்படும் என்ற அறிவிப்பும், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் திட்ட வரைவு தயாரிக்கப்படவேண்டும் என்ற இலக்கும், இந்த கருத்தரங்கின் நோக்கம் வெறும் அரசியல்தான் என்பதையும், எதிர்வரும் தேசியத் தலைவர் தேர்தலில் பிரச்சார யுக்தியாக பயன்படுத்தப்படப் போகும் களம் இது என்பதையும் மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளது.

பொருளாதார நிபுணர்களும், தொழில் வல்லுநர்களும் இணைந்து தயாரிக்க வேண்டிய திட்ட வரைவு ஏன் தென் பகுதி, வட பகுதி என சுற்றுப் பயணம் போகின்றது – அங்கு மஇகா தலைவர்களைத் திரட்டிப் பிரச்சாரம் செய்வதற்கா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ ரமணன் “கட்சிப்பணிகளில் கனகம் பழனிவேல் தலையிடுகின்றார் என நான் ஏற்கனவே கூறியிருந்த கூற்று தற்போது நிருபணமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். (பார்க்க தனிச்செய்தி)

அம்பாங் தொகுதியின் மஇகா தலைவர்களில் ஒருவரான டத்தோ என்.முனியாண்டி “கடந்த ஐந்து ஆண்டுகளில் பழனிவேல் 11வது மலேசியத் திட்டத்திற்கென எந்தவித திட்டத்தையும் முன்மொழியாத காரணத்தால்தான் நாம் அந்தத் திட்டத்தில் புறக்கணிக்கப் பட்டிருக்கின்றோம். இந்நிலையில், வெளிநாட்டுக்காரர்களைக் கொண்டு மலேசிய இந்தியர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் கருத்தரங்கம் தேவையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியில் தேசியத் தலைவருக்கு நேரமில்லை என்றால் துணைத் தலைவரும் மற்ற உதவித் தலைவர்களுமே இணைந்து நடத்தலாமே என்ற கேள்வியையும் பலர் எழுப்பியுள்ளனர்.

ஏற்கனவே பிளவுபட்டுக் கிடக்கும் மஇகாவை ஒன்றுபடுத்த இதுபோன்ற கருத்தரங்குகள் மிகப் பொருத்தமான களங்கள். ஆனால், அங்கேயும் ஒரே சார்பு அணியினரைக் கொண்டு வந்து கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவை, விரிசலை மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்வது, அதுவும் கட்சியை ஒழுங்குபடுத்த வேண்டிய, ஒற்றுமைப்படுத்த வேண்டிய தேசியத் தலைவரே இவ்வாறு செய்வது நியாயமா? என்ற கேள்வியையும் சில தரப்பினர் முன்வைத்துள்ளனர்.

இதற்கிடையில், 11வது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை – மீண்டும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டார்கள் என்ற அறைகூவல்கள் எழுந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் –

அவற்றை சரிப்படுத்த வேண்டிய மஇகா இவ்வாறாக ஒரு சிறு குழுவினரை வைத்து கருத்தரங்கம் நடத்தி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதும் கட்சி வட்டாரங்களில் பலத்த அதிருப்தி அலைகளை ஏற்படுத்தி உள்ளது

-இரா.முத்தரசன்