Home நாடு “திட்டவரைவு முற்றிலும் ரகசியமாக உருவாக்கப்பட்டுள்ளது” – சுப்ரா குற்றச்சாட்டு

“திட்டவரைவு முற்றிலும் ரகசியமாக உருவாக்கப்பட்டுள்ளது” – சுப்ரா குற்றச்சாட்டு

889
0
SHARE
Ad

SUBRA

கோலாலம்பூர், மே 26 –  அண்மையில் நடைபெற்ற மஇகா திட்டவரைவு வளர்ச்சிக் கருத்தரங்கம் ‘அரசியல் உள்நோக்கத்துடன்’ நடத்தப்பட்டுள்ளதாக மஇகா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுப்ரா கூறுகையில், “தலைவருக்கு நேரமில்லாத காரணத்தால், தான் கருத்தரங்கத்திற்குப் பொறுப்பேற்று நடத்துவதாக தேசியத் தலைவரின் மனைவி கூறியுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது மஇகா-விற்கு நல்லது இல்லை”

#TamilSchoolmychoice

“உண்மையாகவே நல்லது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால், 6 மாதத்திற்கு முன்பாகவோ அல்லது 1 வருடத்திற்கு முன்பாகவோ செய்திருக்க வேண்டும். அரசாங்கத்தில் கொடுத்து 11-வது மலேசியத் திட்டத்தில் இணைத்திருக்க வேண்டும்”

“எல்லா அறிவிப்புகளும் வெளியான பின்பு அதை எதற்கு செய்ய வேண்டும் அல்லது கட்சியில் பிரச்சனைகள் உள்ள போது எதற்கு செய்ய வேண்டும். காரணம் அந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டவரைவு (Blueprint) நடவடிக்கையை கட்சி எடுக்கவில்லை என்று குறிப்பிட்ட சுப்ரா, மஇகா தலைவர்களில் பலர் இன்னும் இந்த விவகாரம் பற்றி எதுவும் அறியாமல் இருளில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், அண்மையில் டத்தோஸ்ரீ பழனிவேல் வெளியிட்ட அறிக்கையில், இந்த திட்டவரைவின் முழுத்திட்டமும் கடந்த ஆண்டே உருவாக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

“அது உண்மை என்றால், அது முற்றிலும் ரகசியமாக உருவாக்கப்பட்டுள்ளது. காரணம் எங்களில் யாருக்கும் அது பற்றித் தெரியாது” என்று டாக்டர் சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 24ஆம் தேதி தலைநகரின் பிரபல தங்கும் விடுதியில் மலேசிய இந்தியர்களுக்கான திட்டவரைவு தயாரிப்பு (Malaysian Indian Blueprint development) கருத்தரங்கு நடைபெற்றது.

அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பழனிவேலின் மனைவி கனகம் பழனிவேலு, தனது கணவருக்கு நேரமில்லாத காரணத்தால், தான் பொறுப்பேற்று நடத்துவதாக கூறியுள்ளார். இதனால் மஇகா-வில் தற்போது சர்ச்சைகள் வெடித்துள்ளன.