Home நாடு “மஇகா என்பது பழனிவேலின் செண்ட்ரியான் பெர்ஹாட் கிடையாது” – டத்தோ ரமணன் காட்டம்

“மஇகா என்பது பழனிவேலின் செண்ட்ரியான் பெர்ஹாட் கிடையாது” – டத்தோ ரமணன் காட்டம்

878
0
SHARE
Ad

unnamed (3)கோலாலம்பூர், மே 26 – மலேசிய இந்தியர்களுக்கான திட்டவரைவு தயாரிப்பு (Malaysian Indian Blueprint development) மீதிலான கருத்தரங்கிற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் மனைவி கனகம் பழனிவேல் பொறுப்பு வகித்தது குறித்து மஇகா வட்டாரங்களில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, மஇகா தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ ரமணன் “கட்சிப் பணிகளில் கனகம் பழனிவேல் தலையிடுகின்றார் என நான் ஏற்கனவே கூறியிருந்த கூற்று தற்போது நிருபணமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், மஇகா விவகாரங்களில் தலையிட கனகம் யார்? பழனிவேலுக்குப் பதிலாக அவர் செயல்பட வேண்டிய அவசியம் என்ன? என்றும் ரமணன் சாடியுள்ளார்.

பழனிவேலுக்கு உண்மையில் அதிக வேலை இருப்பதாக இருந்தால், திட்டவரைவு கருத்தரங்கிற்கு தலைமையேற்கும் பொறுப்பை மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ சுப்ரமணியத்திடம் வழங்கி இருக்க வேண்டும் என்றும் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக செல்லியலைத் தொடர்பு கொண்டு பேசிய டத்தோ ரமணன் கூறியிருப்பதாவது:-

“பழனிவேலுக்கு நேரமில்லை என்று அவரது மனைவி கனகம் கூறியிருக்கிறாரே? நான் கேட்கிறேன். கடந்த 6 ஆண்டுகளாக கட்சியின் தேசியத் தலைவராக டத்தோஸ்ரீ பழனிவேல் என்ன செய்தார்?”

“நமது இந்திய சமுதாயத்தின் தலையாய பிரச்சனைகளாக இருந்து வரும் குறைந்த வருமானம், வேலையின்மை, இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லுதல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க ஏதாவது முயற்சிகள் எடுத்திருக்கிறாரா?.. இல்லை.”

“சரி.. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் கேமரன் மலையில், ஏதாவது வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறாரா? அல்லது அவர் வகித்து வரும் அமைச்சர் பதவியின் மூலம் ஏதேனும் புதிய முயற்சிகளை முன்னெடுத்திருக்கின்றாரா? அதுவும் இல்லை”

“அப்படி எதுவுமே செய்யாத நிலையில், ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் திட்டவரைவு தயாரிக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு அப்படி என்ன வேலை?”

“ஒரு இராணுவத் தளபதிக்கு அதிக வேலைப் பளு இருந்தால், அவருக்குப் பதிலாக அவரது  மனைவி பொறுப்பேற்க முடியுமா? அல்லது ஒரு மருத்துவர் மருத்துவமனைக்கு வர இயலாத காரணத்தால் தனது மனைவியை மருத்துவம் பார்க்க அனுப்பி வைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. காரணம் அவரவர் வகிக்கும் பதவி அவ்வளவு முக்கியமானது.”

“மஇகா என்பது பழனிவேலின் சொந்த செண்ட்ரியான் பெர்காட் கிடையாது. அவருக்குப் பதிலாக மனைவியும், பிள்ளைகளும் பொறுப்பு வகிக்க. மஇகா என்பது ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தையும் பிரதிநிதிக்கும் கட்சியான மலேசிய இந்திய காங்கிரஸ்.”

“இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான திட்டவரைவை தயாரிக்க வெள்ளைக்காரர்களின் உதவியை நாடியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகள் எப்படி விளங்கும். நம் நாட்டிலேயே எத்தனையோ பொருளாதார நிபுணர்கள், அதுவும் குறிப்பாக இந்தியர்கள் இருக்கும் போது தகுதியில்லாதவர்களை கொண்டு  உருவாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.”

“பிரதமருக்கே பொருளாதார ஆலோசகராக இருந்து வரும் டான்ஸ்ரீ ரேய்மண்ட் நவரத்தினம் இருக்கிறார். டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன், டான்ஸ்ரீ ஏ.கே நாதன் போன்ற தலைவர்கள் இருக்கிறார்கள். ஏன் மஇகாவிலேயே பொருளாதாரத்தில் பிஎச்டி முடித்த டான்ஸ்ரீ கே.எஸ் நிஜார் இருக்கிறார். இவர்களெல்லாம் இருந்தும் திட்டவரைவு தயாரிப்பது ஏன் தகுதியில்லாதவர்களிடம் சென்றுள்ளது?”

“இறுதியாக நான் ஒன்று சொல்கிறேன். தலைவராக இருக்கத் தகுதியில்லாத பழனிவேலை விரைவில் வெளியேற்றவில்லை என்றால், நிச்சயமாக நமது இந்திய சமுதாயம் அடிமைகளாக ஆக்கப்பட்டுவிடுவோம்” -இவ்வாறு டத்தோ ரமணன் தெரிவித்தார்.

 – ஃபீனிக்ஸ்தாசன்