சென்னை, மே 27 – மலேசியா – இந்தியா இணை தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘முத்துக்குமார் வாண்டட்’.
மலேசியாவின் முன்னணி இசையமைப்பாளர் சுந்தரா இப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். சுந்தராவின் ஆஸ்தான பாடலாசிரியரான கோக்கோ நந்தா பாடல்வரிகள் எழுதியிருப்பதோடு, பிரபல பாடகர்களான நரேஷ் ஐயர், திவாகர் உள்ளிட்டோர் உடன் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, ராதாரவி, கங்கை அமரன், பெப்சி சிவா, இயக்குனர் அரவிந்த ராஜ், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
(மலேசிய நடிகை நஷீரா மற்றும் கதாநாயகன் சரண்)
இப்படத்தின் இசை தட்டினை கங்கை அமரன் வெளியிட, பின்னணி பாடகர் நரேஷ் ஐயர் பெற்றுக் கொண்டார்.படத்தின் முன்னோட்டத்தை ராதாரவி வெளியிட, கங்கை அமரன் பெற்றுக் கொண்டார்.
கங்கை அமரன் படம் குறித்து பேசுகையில், ‘‘மலேசியாவிலிருந்து வந்திருக்கும் இந்த படக்குழுவினர் இங்கு தமிழில் வெற்றி பெற வேண்டும். இவர்களுக்கெல்லாம் முன்னோடிகளாக மலேசியா வாசுதேவன் போன்றோர் இங்கு வந்து பல தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளனர். எனவே திறமையுள்ளவர்கள் எங்கு வேண்டுமானாலும் வெற்றியடையலாம்” என்று கூறி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
(முத்துக்குமார் வாண்டட் படக்குழுவினர்)
எம்.பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக சரண் அவருக்கு ஜோடியாக மலேசிய நடிகை நஷிரா நடிக்க, இவர்களுடன் நிழல்கள் ரவி, ஃபாத்திமா பாபு, வி.சி.ஜெயமணி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பிரபலக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.
நகைச்சுவையும், திடீர் திருப்பங்களையும் கொண்ட இப்படம் விரைவில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இசையமைப்பாளர் சுந்தரா
“ஜோக்கான சாரி மாக்கான்”, “கனவே கனவே”, “சொட்டு சொட்டா” இந்த பாடல்களை நினைவிருக்கிறதா? …. மலேசியாவில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்த இந்த பிரபல பாடல்களை இசையமைத்த இசையமைப்பாளர் சுந்தரா, தற்போது ‘முத்துக்குமார் வாண்டட்’ என்ற படத்தின் மூலமாக தமிழகத் திரையுலகில் கால்பதித்துள்ளார்.
‘முத்துக்குமார் வாண்டட்’ படத்தில் நரேஸ் ஐயர் பாடியுள்ள ‘ஆதாம் எனக்கெனவே’ என்ற பாடல் நிச்சயமாக இளைஞர்கள் மனதை சுண்டி இழுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு அந்த பாடலின் இசையும், வரிகளும் அமைந்துள்ளன.
‘முத்துக்குமார் வாண்டட்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடையும் பட்சத்தில், நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல தமிழ்நாட்டின் ‘மோஸ்ட் வாண்டட்’ இசையமைப்பாளர்கள் பட்டியலில் நமது மலேசிய இசையமைப்பாளர் சுந்தராவுக்கும் ஓர் அழகிய இடம் காத்திருக்கின்றது.
‘முத்துக்குமார் வாண்டட்’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ள மலேசியக் கலைஞர்களுக்கும், மலேசியர்களின் திறமையை உலக அளவில் கொண்டு சேர்த்துள்ள இசையமைப்பாளர் சுந்தராவின் முயற்சிகளுக்கும் செல்லியல் சார்பில் வாழ்த்துகள்..
– ஃபீனிக்ஸ்தாசன்