கோலாலம்பூர் – ‘முத்துக்குமார் வாண்டட்’, ‘கனவுகள்’ -ஹிப்ஹாப் பாடல் என தனது அண்மைய இசைப் பதிவுகளுக்கு இளைஞர்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பினைத் தொடர்ந்து, அடுத்தக் கட்ட முயற்சிகளில் மும்முரமாகிவிட்டார் இசையமைப்பாளர் சுந்தரா..
இசை குடும்பத்தில் இருந்து வந்தவரான சுந்தரா, மலேசிய இசைத்துறையில், தனது இளம் வயது முதல் இன்று வரை தனக்கென தனி முத்திரைப் பதித்து வருபவர். மெலடியாக இருக்கட்டும், ஹிப்ஹாப்பாக இருக்கட்டும் இரண்டிலுமே அவரது பாடல்கள் தனித்துவம் பெற்றிருக்கும்.
திரைப்படங்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த கலைஞர்களோடு பணியாற்றிக் கொண்டு இருக்கும் அதே வேளையில், ‘ஜோக்காஸ் குரூ’ போன்ற இளம் கலைஞர்களோடும் பாரபட்சமின்றி பணியாற்றி வருவது அவரது சிறப்பு.
அப்படிப்பட்ட சிறப்புகள் நிறைந்த, நமது மலேசிய இசையமைப்பாளர் சுந்தராவிடம் ஐந்தே ஐந்து சுவாரஸ்யமான கேள்விகளும், அதற்கு அவரது சுவையான பதில்களும் தான் இந்தக் கட்டுரை.
செல்லியல்: நீண்ட நாளுக்குப் பிறகு உங்க ஹிப்ஹாப் ரசிகர்களைத் திருப்திபடுத்த ‘கனவுகள்’ கொண்டு வந்திருக்கீங்க.. கனவுகள் பண்ணும் போது எப்படி இருந்தது உங்க உணர்வு?
சுந்தரா: ஒரு முடிவோடு தான் இந்த இசைத்துறைக்கே வந்தேன். அதாவது இசையின் பன்முகங்களையும் செய்து பார்த்துவிடும் ஆசை எனக்கு இருந்தது. அதேநேரத்தில், நீங்க சொல்ற மாதிரி ஹிப்ஹாப்லயும், ராக் மியூசிக்லையும் எனக்கு தனி ஆசை இருந்தது. அதனால, ‘கனவுகள்’ என்ற இந்த ஹிப்ஹாப் பாட்டு ரொம்ப நாளுக்குப் பிறகு என்று சொல்ல முடியாது. அண்மையில கூட, ஒரு பாட்டு செஞ்சேன். ஒரு நாடகத்திற்காக மிஸ்டர் கேரியும், ஸ்லை ஸ்வாட் குழுவில் இருந்து ஒரு ராப்பருடனும் இணைந்து அந்தப் பாட்டு செஞ்சேன். ‘கனவுகள்’-ஐ பொருத்தவரையில் அது மெலடியுடன் ராப் ஒரு பகுதியா இருந்தது. அந்தப் பாடல் உருவாக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
செல்லியல்: ‘கனவுகள்’ பாடல் குறித்து உங்களது நண்பர்கள் என்ன சொல்றாங்க?
சுந்தரா: இப்போதைக்கு மலேசியாவில் நிறைய தனிப்பாடல்கள் வெளிவந்துக்கிட்டு இருக்கு. அதனால ஒவ்வொரு பாடலையும் மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்குறதுக்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கு. ‘கனவுகள்’ பாடலைப் பொருத்தவரையில் ஒரே இரவில் ஒட்டுமொத்த மக்களையும் சென்றடையும் வைரல் போல் அவ்வளவு பெரிய ஹிட் என்று சொல்ல முடியாது. அதேநேரத்துல, இந்தப் பாடல் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் ஏறும் என்று நம்பிக்கை இருக்கு. காரணம், இந்தப் பாடல் ஒரு மெலடி பேஸ். ரொம்ப அனுபவிச்சு இசையமைத்து, வரிகள் எழுதி, பாடியிருக்காங்க, அதற்கு ஏற்ற அழகான காட்சிகள் கொடுத்திருக்காங்க. ஆகையால நிச்சயமா இந்தப் பாட்டுக்கு மக்கள் மத்தியில் ஒரு இடம் கிடைக்கும். நிறைய பாடல்கள் தற்போது இண்டிப்பெண்டட் மார்க்கெட்டுல இருக்குறதுனால கொஞ்ச கொஞ்சமா மக்களுக்கு தெரியவரும் போது தான் அதன் மேல ஈர்ப்பு ஏற்படும். எனது நண்பர்கள், ரசிகர்களைப் பொருத்தவரையில் எப்போதும் போல நல்ல கருத்துக்களைத் தான் கொடுத்து வருகின்றார்கள்.
செல்லியல்: உங்க அனுபவத்துல மெலடியுடன், ராப் இணையும் போது ரசிகர்கள் அதை எப்படி எடுத்துக்குறாங்க?
சுந்தரா: மெலடிங்கிறது ரொம்ப அற்புதமான விஷயம். அந்தக் காலத்துல இருந்து இப்ப வரைக்கும் மெலடிய மையமா வச்சு ஒரு பாடல் செஞ்சா அது மக்கள் மனசுல ரொம்ப எளிதா இடம்பிடிக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கு. ஆக மெலடியில ராப் சேர்க்கும் போது இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி ரொம்ப அற்புதமா இருக்கு. உலக அளவில முதன் முதல்ல தமிழ் பாடல்கள்ல மெலடியோட, ராப் சேர்த்தது ‘கனவே கனவே’ பாடல் தான்னு சொல்லலாம். காரணம், அந்த பாடல்ல நாங்க மெலடியோட, ராப் சேர்த்த போது தமிழுக்கு அது ரொம்பவும் புதுசு. அந்த நேரத்தில் யாரும் அப்படி ஒரு பாட்டு செய்யலை. நாங்களும் ஆங்கிலப் பாடலைப் பார்த்து தான் அந்த முறையை தமிழுக்கு அறிமுகப்படுத்தினோம். அன்னைக்கு ஆரம்பிச்சது இன்னைக்கு வரைக்கும் போய்ட்டு இருக்கு. மெலடியோட, சொல்லிசை சேர்வது ரொம்ப அற்புதமான விசயம்.
செல்லியல்: சரி.. ‘முத்துக்குமார் வாண்டட்’ பாடல்கள் எல்லாமே ரொம்ப சிறப்பா இருந்தது.. அடுத்து என்னென்ன படங்களுக்கு பாடல்கள் செய்றீங்க?
சுந்தரா: ‘முத்துக்குமார் வாண்டட்’ திரைப்படத்துல 5 பாடல்கள் செஞ்சிருந்தேன். பாடல்கள் மட்டும் தான் செஞ்சிருந்தேன். அதற்கு இந்தியாவிலும், மலேசியாவிலும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. அடுத்ததா இப்போதைக்கு இந்தோனேசியா பாடல் ஒன்றும், ‘த மொமன்டஸ்’ என்ற படத்திற்கு ஆங்கிலப் பாடல் ஒன்றும் செய்திருக்கேன். அந்தப் படம் பிலிம் பெஸ்டிவலுக்கெல்லாம் அனுப்பியிருக்காங்க. அடுத்ததா என்னுடைய இரண்டாவது திரைப்படம் இப்போது தான் பேச்சுவார்த்தைகள் போயிட்டு இருக்கு. அது முழுமுழுக்க தமிழ்நாட்டுப் படம். அதைப் பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது. அடுத்தடுத்து, அதற்கான அறிவிப்புகளை செய்வேன்.
செல்லியல்: உங்ககிட்ட பாடல் செய்யணும், உங்க இசையில பாடணும்னு வர இளம் கலைஞர்களிடம் நீங்க என்ன தகுதிகளை எதிர்பார்க்குறீங்க?
சுந்தரா: மொத விசயம் என்னன்னா..பாடகராகணும்னு வரவங்களுக்கு அதன் மேல ஒரு தீவிரமான ஆர்வம் இருக்கணும். அதை தான் நான் கூர்ந்து கவனிப்பேன். பெரிய அளவில் லட்சியம் இல்லாட்டினாலும், நல்லா பாடணும்னு ஆர்வமும், அதற்கு ஏற்ற முயற்சியும் இருக்கணும். சும்மா, போசிங்காகவோ, நானும் ஒன்னு செஞ்சிரணும்னோ வந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
ரெண்டாவது .. ஒரு பாடலைப் பாடத் தேவையான அடிப்படை விசயங்களாவது தெரிஞ்சிருக்கணும். ஸ்ருதின்னா என்ன? ராகம்னா என்னன்னு தெரிஞ்சிருக்கணும். இயல்பாகவே பாட வரணும். இந்த விசயங்களைத் தான் நான் அவங்ககிட்ட எதிர்பார்ப்பேன். இதுல எதையுமே கவனிக்காம ரெக்கார்டிங் வந்தா அது நியாயம் இல்லல்ல..
இது போக, தவறுகள் ஏற்படும் போது திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும், முயற்சியும் இருந்தா போதும்.
இந்தப் பேட்டி இன்று வெளியாகும் போது, அண்மையில் சுந்தரா இசையில் ‘என்னடா மச்சி’ என்ற ஒரு தனிப்பாடலும், சைக்கோ மந்த்ரா குரலில், மணி வில்லன்ஸ் வரிகளில் ‘மதனா’ என்ற புதிய பாடலின் அறிவிப்பும் வெளியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.