கோலாலம்பூர்,மே 28- ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1 எம்டிபி) தொடர்பான சர்ச்சைகள் குறித்து விசாரணை செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் அழைக்கப்படலாம் எனப் பொதுக் கணக்காய்வுக் குழு சூசகமாகத் தகவல் வெளியிட்டுள்ளது.
அதே சமயம்,அருள் கந்தா கந்தசாமி, டத்தோ ஷஹ்ருல் அஸ்ரால் இருவரும் விசாரணைக்கு வரத் தவறினால் அவர்கள் மீது நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு கொண்டு வரப்படலாம் எனவும் அக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக 1 எம்டிபி.யின் நடப்பு மற்றும் முன்னாள் கணக்காய்வாளர்கள் அடுத்த மாதம் ஜூன் 10-ஆம் தேதியும், 17-ஆம் தேதியும் விசாரணைக் குழு முன் தோன்றி விசாரணைக்கு உட்பட வேண்டும் என்று நிதி அமைச்சுக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக விசாரணைக் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ நுர் ஜஸ்லான் முகமத் நேற்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து அவர் மேலும் கூறிதாவது:
“எம்டிபி நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களையும் பின்பு விசாரணைக்கு அழைப்போம்;கணக்காய்வாளர்களை அடுத்து வாரிய உறுப்பினர்களை அழைப்போம்.அனைத்துத் தகவல்களையும் சேகரித்தவுடன் அடுத்து யாரை அழைப்பது என்பதை முடிவு செய்வோம்” என்றார்.
அப்போது,நிதியமைச்சருமான நஜீப் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என வலியுறுத்துக் கேட்டதற்கு, “நாங்கள் சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.அதனால்,பிரதமரையும் நாங்கள் அழைக்க நேரிடலாம்” என அவர் குறிப்பிட்டார்.
எனினும்,விசாரணைக்கான தேதியை அவர் வெளியிடவில்லை.