Home இந்தியா டெல்லி விமான நிலையத்தில் கதிரியக்க கசிவால் பரபரப்பு!

டெல்லி விமான நிலையத்தில் கதிரியக்க கசிவால் பரபரப்பு!

593
0
SHARE
Ad

IGAபுது டெல்லி, மே 30 – டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் மருத்துவக் கருவிகளில் இருந்து கதிரியக்கம் கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விமான நிலையத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கதிரியக்க கசிவை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக மிகப் பெரும் விபத்து தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துருக்கியில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானம் ஒன்றில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்காக மருத்துவக் கருவிகள் அடங்கிய சரக்குப் பெட்டி ஒன்று வந்துள்ளது. விமானம் தரையிறங்கியது முதல் மருத்துவக் கருவிகளில் இருந்து கதிரியக்கம் வெளியானதாகக் கூறப்படுகிறது. விமான நிலையத்தில் திடீரென கதிரியக்கம் வெளியானதால் பயணிகள் பலர் கண் எரிச்சலுக்கு ஆளாகினர்.

இது தொடர்பாக விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கதிரியக்கத் தன்மை கொண்ட மருத்துவக் கருவிகளில் இருந்து கதிரியக்க கசிவு ஏற்பட்டது. எனினும், எந்தவொரு அசம்பாவிதங்களும் ஏற்படுவதற்கு முன்பாக அணு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக் குழுவினர் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு கதிரியக்கக் கசிவு நிறுத்தப்பட்டது.”

#TamilSchoolmychoice

“இதனால் வழக்கமான விமான நிலையப்பணிகள் பாதிக்கப்படவில்லை. கதிரியக்க கசிவு சரக்கு வைக்கும் பகுதியில் நடந்ததால், விமான பயணிகளுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கதிரியக்க கசிவு தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது:-

“இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் போதிய நடவடிக்கை எடுத்து கதிரியக்க கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு தான் இந்திரா காந்தி விமான நிலையம் உலக அளவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கதிரியக்க கசிவு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுமளவிற்கு பாதுகாப்புக் குறைபாடுகள் விமான நிலையத்தில் உருவாகி உள்ளன வா என்று எண்ணத் தோன்றுகிறது.