Home அவசியம் படிக்க வேண்டியவை இந்திய தொலைத்தொடர்புத் துறையை குறி வைக்கும் கார்லோஸ் ஸ்லிம்!

இந்திய தொலைத்தொடர்புத் துறையை குறி வைக்கும் கார்லோஸ் ஸ்லிம்!

685
0
SHARE
Ad

America_Movilபுது டெல்லி, மே 30 – பில்கேட்ஸிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கும் கார்லோஸ் ஸ்லிம் (75), இந்திய தொலைத்தொடர்புத் துறையில் களமிறங்க சமயம் பார்த்து காத்திருக்கிறார். அவரின் இந்த காத்திருப்பிற்கு இந்திய சந்தைகளின் வளர்ச்சி மட்டும் காரணமல்ல, மெக்சிகோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அவரின் தொலைத்தொடர்பு நிறுவனமான ‘அமெரிக்கா மூவில்’ (America Movil) சற்றே பொருளாதார நெருக்கடியில் தடுமாறி வருவதனால் தான்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தியா வந்திருந்த கார்லோஸ் ஸ்லிம், இந்தியாவில் பெரிய அளவில் தொலைத்தொடர்பு துறையில் சாதித்திராத ‘வீடியோகான்’ (Videocon) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வேணுகோபால் தூத் மற்றும் சில செல்பேசி நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது தொலைத்தொடர்புத் துறையில் இந்தியாவில் பெருகி வரும் வாய்ப்புகள் பற்றி ஸ்லிம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மூவில் நிறுவனம் இந்தியாவில், தொலைத்தொடர்புத் துறை வர்த்தகத்தில் மட்டுமல்லாமல் கல்வி, ஊடகம், மருத்துவம், நிதி சேவைகள் உள்ளிட்ட வேறு  சில துறைகளிலும் முதலீடுகளை செய்ய ஆர்வமாக உள்ளது. எனினும், இதுபற்றிய தகவல்களை அளிக்க அமெரிக்கா மூவில் நிறுவனம் மறுத்துவிட்டது. வீடியோகான் நிறுவனமோ, தங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களிடமிருந்து ஆதரவு பெருகி வருவதாக தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்கா மூவில் நிறுவனம் மெக்சிகோ மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒட்டுமொத்தமாக 18 பிரிவுகளாக இயங்கி வந்தாலும், கார்லோஸ் ஸ்லிம் இந்திய சந்தைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அதற்கு மிக முக்கியமான காரணங்கள் இந்தியாவில் பெருகி வரும் திறன்பேசிகள் வர்த்தகம் மற்றும் இந்திய மக்களின் ஜனத்தொகை.

இதுவரை வீடியோகான் தலைமை நிர்வாகியை மூன்று முறை சந்தித்துள்ள கார்லோஸ் ஸ்லிம், அனைத்தும் சரியாக நடந்தால் அடுத்த முறை இரு நிறுவனங்களின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 49 சதவீத பங்குகளை வீடியோகான் நிறுவனத்திடம் இருந்த அமெரிக்கா மூவில் கைப்பற்றும் என அந்நிறுவனங்களின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.