Home நாடு தடுப்பு முகாம்கள் அண்மையில் உருவானவை: வான் ஜுனைடி

தடுப்பு முகாம்கள் அண்மையில் உருவானவை: வான் ஜுனைடி

511
0
SHARE
Ad

வாங் கெலியான், மே 30 – மலேசிய தாய்லாந்து எல்லையில் உள்ள குன்றுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு முகாம்கள் அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டவை என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனைடி (படம்) தெரிவித்துள்ளார்.

Wan Junaidiபெர்லிஸ் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குடியேறிகளுக்கான இந்த தடுப்பு முகாம் பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டவை என்று கூறப்படுவதற்கு தகுந்த ஆதாரங்கள் ஏதுமில்லை என்று அவர் கூறினார்.

“இந்த முகாம்களை அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள மரப் பொருட்கள் அனைத்தும் புதிதாகவே உள்ளன. இம்முகாம்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து இதுவரை 3 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சுற்றி வைக்க பயன்படுத்தப்பட்ட வெள்ளைத் துணியும் புதிது என்று தெரிய வந்துள்ளது,” என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வான் ஜூனைடி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இத்தகைய முகாம்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு காலமானது? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், குன்றின் மேல் பகுதிக்கு யாரும் செல்வதில்லை என்றும், அதற்கான வசதிகள் இல்லை என்றும் அவர் கூறினார்.

“சில குன்றுகள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 570 மீட்டர் உயரத்தில் உள்ளன. இத்தகைய குன்றின் உச்சியில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  நமது ரோந்துக் குழு அப்பகுதிகளுக்குச் செல்வதில்லை. ஏனெனில் பொதுவாக அத்தகைய உயரப் பகுதிகளுக்கு யாரும் செல்வதில்லை என்றே கருதப்பட்டு வந்தது.  மலேசிய, தாய்லாந்து எல்லைப் பகுதியில் முள்வேலியோ அல்லது தடுப்புச் சுவர்களோ அமைக்கப்படவில்லை. இனி அவற்றை அமைக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வோம்,” என்றார் வான் ஜுனைடி.

இதற்கிடையே வாங் கெலியான் பகுதியில் உள்ள புக்கிட் வாங் பர்மாவில் வியாழக்கிழமை இரவு மேலும் 9 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கிடைத்துள்ள சடலங்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.