Home தொழில் நுட்பம் கூகுள் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாடு 2015!

கூகுள் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாடு 2015!

610
0
SHARE
Ad

sundarசான் பிரான்சிஸ்கோ, மே 30 –  கூகுள் நிறுவனம் தனது அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாட்டை சான் பிரான்சிஸ்கோவில் கடந்த இரண்டு நாட்களாக வெற்றிகரமாக நடத்தி முடித்தது. புது முயற்சிகளுக்கும் புத்தாக்கத்திற்குமான வாயில் கதவுகளை எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கும் கூகுள் அது பற்றி வெளி உலகிற்கு அறிவிக்கும் மாநாடு தான் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாடு. இந்த முறையும் கூகுள் பல்வேறு புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

வருகிறது ‘அண்டிரொய்டு எம்’ (Android M):

அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாட்டில்  அண்டிரொய்டு எம்-ன் அறிமுகம் தான் அதிக அளவிலான கவனம் ஈர்த்தது. அண்டிரொய்டு இயங்குதள வரிசையில் கூகுள் அறிமுகப்படுத்தும் அடுத்த மேம்பாடு தான் அண்டிரொய்டு எம். திறன்பேசிகளின் பாதுகாப்பு முதல் செயலிகளின் இயக்கம், செல்பேசி வழி கட்டணம் செலுத்தும் முறையான அண்டிரொய்டு பே மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவையான ‘கூகுள் நவ்’ (Google Now) வரை அனைத்து விதமான சேவைகளையும் உள்ளடக்கி உள்ளது.

#TamilSchoolmychoice

ஆப்பிளின் அடுத்த வெளியீடான ஐஒஎஸ் 9 மற்றும் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 10 இயங்குதளங்களுக்கு மிகப்பெரிய அளவிளான போட்டியை அண்டிரொய்டு எம் அளிக்கக் காத்திருக்கிறது.

‘நவ் ஆன் டேப்’ (Now on Tap):

கூகுள் என்றாலே நமக்கு தோன்றுவது அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்பது தான். கூகுளின் நவ் ஆன் டேப் வசதியும் நமக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கான மேம்பட்ட சேவை தான். திறன்பேசிகளின் திரையில் எந்த பொருளை ஸ்கேன் செய்தாலும், ஒற்றை தொடுகையில் அந்த பொருளின் ஒட்டுமொத்த தகவலும் நமக்கு தெரிந்துவிடும். ஸ்கேன் செய்தல் மட்டுமல்ல, நாம் ஒரு பாடலை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதனை பதிவு செய்து டேப் பொத்தானை நகர்த்தினால் அந்த பாடல் பற்றிய அனைத்து தகவல்களும் வந்துவிடும்

‘அண்டிரொய்டு பே’ (Android Pay):

‘ஆப்பிள் பே’ (Apple Pay) சேவைக்கான மிகப் பெரிய அச்சுறுத்தல் தான் அண்டிரொய்டு பே சேவை. கூகுளின் முந்தைய சேவையான ‘கூகுள் வாலெட்’ (Google Wallet) க்கு பதிலாக அறிமுகமாகி உள்ள இந்த திட்டம், செல்பேசி கட்டணமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை எற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த சேவைமுறை இனி ‘லாலிபாப்’ (Lollipop) மற்றும் ‘கிட்கேட்’ (Kitkat) பதிப்புகளிலும் மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கார்போர்ட்’ (Cardboard)

மெய்நிகர் தொழில்நுட்பத்திற்காக கூகுள், கேமரா தயாரிப்பாளரான ‘கோப்ரோவுடன்’ (GoPro) இணைந்து உருவாக்கியது தான் கார்ட்போர்ட். மிகக் குறைந்த விலையில் திறன்பேசிகளுக்கான மெய்நிகர் தொழில்நுட்பக் கருவி தான் இந்த கூகுள் கார்போர்ட்.

மேற்கூறியவை மட்டுமல்லாமல், கூகுள் போட்டோஸ், கைரேகை தொழில்நுட்பம், அண்டிரொய்டு கைக்கடிகாரங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘எச்பிஒ’ (HBO) தொலைக்காட்சியின் செயலிகள் என பல்வேறு தொழில்நுட்பங்கள் கூகுள் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அறிமுகமான பெரும்பாலான தொழிநுட்ப மேம்பாடுகள் இந்த வருடத்திலேயே வர்த்தகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.