கோலாலம்பூர், மே 30 – தமிழக சினிமா நடிகர்களில் முத்தக் காட்சிக்குப் பெயர் போனவர் உலகநாயகன் கமல்ஹாசன். தன்னைப் பற்றிய சர்ச்சைகளை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாத கமல் தொடர்ந்து தனது படங்களில் கதாநாயகியுடன் உதட்டோடு உதடு பதிக்கும் முத்தக்காட்சிகளை வைத்துக் கொண்டு வருகிறார்.
அந்த சர்ச்சை அண்மையில் வெளியான கமலின் ‘தூங்காவனம்’ படப் போஸ்டர் வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
அப்படி சர்ச்சைக்குள்ளான கமல்ஹாசனின் சில முத்தக்காட்சிகள்:
புன்னகை மன்னன்
கடந்த 1986-ம் ஆண்டு வெளிவந்து வசூலில் சக்கை போடு போட்ட படம். இளையராஜாவின் இசையில் படத்திலுள்ள அத்தனைப் பாடல்களும் இன்று வரை எங்காவது ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படத்தில் நாயகனும், நாயகியும் தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஒரு காட்சியில் நடிகை ரேகாவுடன் கமல்ஹாசன் உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டிருப்பார். தணிக்கைக் குழுவினரால் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகாநதி
சந்தான பாரதி இயக்கிய இப்படம் கடந்த 1994-ம் ஆண்டு திரைக்கு வந்தது. கிராமத்தைச் சேர்ந்த பண்ணையார், நகர வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு சில ஏமாற்றுப் பேர்வழிகளில் பணத்தையும் இழந்து, குடும்பத்தையும் இழந்து தவிக்கும் சமூகப் பிரச்சனையை மையமாகக் கொண்ட படம். இப்படத்தில் நடிகை சுகன்யாவுடன் ஒரு காட்சியில் எதிர்பாராமல் திடீரென முத்தம் பதிப்பார் கமல். வார்த்தைகள் ஊமையாகும் போது அங்கு முத்தம் தானே அன்பை வெளிப்படுத்தும் ஒரே கருவி என்பது தான் அக்காட்சிக்கான அர்த்தமாகக் கூறப்பட்டது.
குருதிப்புனல்
பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளிவந்த குருதிப்புனல் படத்தில், கமல்ஹாசன், அர்ஜூன் இருவரும் உளவுத்துறை அதிகாரிகளாக நடித்திருப்பார்கள். கமலஹாசனுக்கு மனைவியாக நடிகை கௌதமி நடித்திருப்பார் (இப்போது நிஜமாகவே). ஒரு காட்சியில் கமல் கௌதமிக்கு இடையில் முத்தக் காட்சி இடம்பெறும். மகன் அதைப் பார்த்து கண்ணை மூடிக்கொள்ளும் போது, “டேய்.. என்ன இப்ப? உங்க அப்பன் உங்க அம்மாளுக்கு முத்தம் குடுக்குறான் அவ்வளவு தான்” என்பார் அதட்டலாக. அன்றைய காலகட்டத்தில் போலீஸ் கதைகளிலேயே வேறு ஒரு பரிமாணத்தைக் காட்டிய படம் குருதிப்புனல்.
ஹே ராம்
படத்தின் கதை, முத்தக்காட்சி என பல சர்ச்சைகளுக்கு இடையில் கடந்த 2000-மாம் ஆண்டில் வெளியான படம். படத்தில் பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியுடன் மிகவும் நெருக்கமான ஒரு முத்தக்காட்சியைப் பதிவு செய்தார் கமல்ஹாசன். இந்த காட்சியில் நடிக்க தனது மனைவியிடம் அனுமதி வாங்கியதாகவும் கூறிக்கொண்டார். ராணி முகர்ஜியோ படத்தில் 10 வினாடிகள் தான் அந்த காட்சி வரும், மற்ற காட்சிகளைப் போல் அதுவும் ஒரு காட்சி அவ்வளவு தான் என்று ரொம்ப இயல்பாகப் பேட்டி கொடுத்தார். இன்று வரை ரசிகர்களின் நெஞ்சில் முத்தத்தை விட ஆழமாக அக்காட்சி பதிந்து போனது.
விருமாண்டி
ஹேராமிற்குப் பிறகு கமல்ஹாசனின் படங்கள் தொடர் சர்ச்சைகளில் சிக்கத் தொடங்கின. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரு வேறு சமுதாயத்தினரை முன்னிலைப் படுத்தி சொல்லப்பட்ட இக்கதைக்கு ‘சண்டியர்’ என்று வைத்த பெயர் உட்பட பெரும் சர்ச்சை வெடித்தது. ஆனால் படத்தின் கதையை விட கேரள நடிகை அபிராமியுடன் கமல்ஹாசனின் உதட்டு முத்தக்காட்சி பரவலாகப் பேசப்பட்டது.
கமல்ஹாசனுக்குப் பிறகு பல்வேறு இளம் நடிகர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகியோடு உதட்டோடு உதடு முத்தம் பதித்துவிட்டார்கள். இந்த காட்சிகளெல்லாம் தேவையா? என்று ஒரு சாராரும், கதைக்குத் தேவையான ஒரு காட்சி, நிஜத்தில் செய்யாததையா படத்தில் காட்டுகிறார்கள் என்று ஒரு சாராரும் இன்று வரை விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
-செல்லியல் தொகுப்பு