Home கலை உலகம் ஜெயலலிதாவின் சிறந்த நடிப்பை வழங்கிய 5 படங்கள்!

ஜெயலலிதாவின் சிறந்த நடிப்பை வழங்கிய 5 படங்கள்!

1086
0
SHARE
Ad

sddefaultஜூன் 1 – 5வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கின்றார் ஜெயலலிதா. அவரது அரசியல் உயர்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவை அவரது சினிமா தாக்கமும், எம்ஜிஆரிடம் அவருக்கு இருந்த சினிமா-அரசியல் நெருக்கமும்தான்.

அதைக் கொண்டு அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக அரசியலில் அடியெடுத்து வைத்த ஜெயலலிதாவின் அசுர அரசியல் வளர்ச்சி பற்றி தமிழ்நாட்டில் அனைவருக்கும் மனப்பாடமாகத் தெரியும்.

ஜெயலலிதாவின் சிறந்த நடிப்பை வழங்கிய 5 தமிழ்ப் படங்களின் வரிசையைப் பார்ப்போமா?

#TamilSchoolmychoice

Vennira Aadai # 1 – வெண்ணிற ஆடை

எத்தனை படங்கள் நடித்தாலும், எத்தனை கதாபாத்திரங்கள் ஏற்றாலும் இரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்து உள்ளே நுழைந்த முதல் படத்தை மறக்க முடியுமா?

ஏறத்தாழ 18வது வயதில் இந்தப் பெண்ணுக்கு இத்தனை அழகா, இத்தனை நடன நளினமா என இரசிகர்களைக் கட்டிப் போட்ட இயக்குநர் ஸ்ரீதரின் சிறந்த கலைப்படைப்புகளில் ஒன்று வெண்ணிற ஆடை.

தனது முதல் தமிழ்ப் படத்திலேயே, அத்தனை நவரசங்களையும் கொட்டி நடித்து, இனிமையான பாடல்களுக்கு அற்புதமான நடன அசைவுகளை வழங்கி தனது முதல் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தியிருந்தார் ஜெயலலிதா.

ap_110# 2 – அடிமைப் பெண்

எம்ஜிஆருடன் அதிகப் படங்களில் நடித்திருந்தாலும், வெறும் காதல் ஜோடியாகத்தான் பல படங்களில் நடித்திருந்தார் ஜெயலலிதா.  அதிக நடிப்புத் திறனைக் காட்ட வாய்ப்பில்லாத படங்கள் அவை.

ஆனால், எம்ஜிஆரின் சொந்தத் தயாரிப்பில் மலர்ந்த அடிமைப் பெண் எம்ஜிஆருக்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்கும் மறக்க முடியாத வெற்றிப் படம்.

இரட்டை வேடங்களில், நடித்திருந்த ஜெயலலிதா, ராணியாகக் காட்டிய வில்லித் தனமும், கண்களில் கொண்டு வந்த குரூரமும், உதட்டுச் சுழிப்பில் வெறுப்பைக் காட்டிய விதமும் இரசிகர்களுக்கு அவரது இன்னொரு பரிமாணத்தைக் காட்டின.

‘ஏமாற்றாதே, ஏமாறாதே’ பாடலில் ரோமானிய பாணி நடனமும், ஆயிரம் நிலவே பாடலில் காட்டிய காதல் இரசமும் இன்றைக்கும் இரசிகர்கள் சிலாகித்துப் பேசும் அம்சங்கள்.

எம்ஜிஆருக்கு வித்தைகளை கற்றுக் கொடுத்து அவரை உருவாக்கும் ஜீவா கதாபாத்திரத்தில், இரசிகர்களைக் கிறங்கடித்த மிகாத கவர்ச்சி – எம்ஜிஆரைக் கட்டிப் பிடித்து உணவு ஊட்டியதிலும் – ஆற்றில் நின்று கொண்டு அவருக்கு  வாள் பயிற்சி கொடுத்த காட்சிகளிலும் ஜெயலலிதா இன்றும் மனதில் நிற்கின்றார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘அம்மா என்றால் அன்பு’ என தன் இனிய குரலால் வசீகரித்து, தனது பாட்டுப் பாடும் திறனையும் காட்டினார் ஜெயலலிதா. அவரது முதல் பாடலில் அவர் உச்சரித்த முதல் வார்த்தையே கால ஓட்டத்தில் அவரது மறுபெயராக (அம்மா) உருவெடுத்தது விதியின் விளையாட்டன்றி வேறென்ன!

vanthalaemagarasi_banner# 3 – வந்தாளே மகராசி

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சாதாரண கறுப்பு வெள்ளைப் படம்தான். ஆனால் பயந்த சுபாவம் கொண்டவராகவும், துணிச்சலான பெண்ணாகவும் இரட்டை வேடங்களில் நடித்து கலக்கினார்.

ஜெய்சங்கர் கதாநாயகன் என்றாலும் படம் முழுக்க ஜெயலலிதாவின் இரட்டை வேட ஆக்கிரமிப்புதான்.

hqdefault# 4 – எங்கிருந்தோ வந்தாள்

இந்தித் திரைப்படத்தின் தழுவல். சிவாஜி கதாநாயகன் என்றாலும், பைத்தியக்கார சிவாஜியைக் கட்டம் கட்டமாகத் திருத்தி, ஒரு கட்டத்தில் தன்னையே தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் சிவாஜியையே மிஞ்சும் அளவுக்கு சில இடங்களில் ஜொலித்திருப்பார் ஜெயலலிதா.

சாதாரண பின்புலத்தைக் கொண்ட வேலைக்காரி கதாபாத்திரத்தில் பைத்தியக்கார சிவாஜியை விட ஜெயலலிதாதான் இரசிகர்களைக் கவர்ந்தார்.

இறுதியில், குணமாகி விட்ட சிவாஜி, ‘இந்தப் பொண்ணு யாரு’ எனக் கேட்கும் இடத்தில் கூனிக் குறுகி நிற்பதிலும், பின்னர் தன்னை நிரூபிக்க, வெகுண்டெழுந்து போராடும் விதத்திலும், இறுதிக் காட்சிகளில் படம் முழுக்க ஜெயலலிதான் ஆக்கிரமித்திருந்தார்.

folder# 5 – சவாலே சமாளி

நாகரீக, பணக்காரப் பெண்ணாக முதலில் அறிமுகம். அதில் காட்டிய உற்சாகம், திமிர், அகங்காரம்.

பின்னர், தனக்குத் தெரியாமலேயே தான் ஒரு பந்தயப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு, தான் அவமதித்த ஏழை விவசாயியையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழலில் நொறுங்கிப் போகும் அவரது தன்மானத்தைக் காட்டிய விதம்.

‘என்னைத் தொடாதீர்கள்’ என ஆக்ரோஷமாகக் கணவனுக்குக் கட்டளையிட்டு விலகியிருப்பது – ஏழை வீட்டில் சின்னச் சின்ன காரியங்களைச் செய்யக் கஷ்டப்படுவது – தனது நிலைமை குறித்து பெற்றோரிடம் குமுறுவது – பின்னர் கணவரின் நல்ல குணம் அறிந்து மனம் மாறுவது – காதல் பாடல்களே இல்லாத படத்தில் இறுதியில் வரும் ஒரே காட்சியில் கணவனுடன் முதன் முறையாக இணைந்து தேக்கி வைத்த அத்தனை காதலையும் கொட்டித் தீர்த்த விதம் – இப்படிப் பல பரிமாணங்களில் ஜெயலலிதா நடிப்பு முத்திரை குத்திய படம் சவாலே சமாளி.

*செல்லியல் தொகுப்பு