கோலாலம்பூர், ஜூன் 1 – நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மலேசியா எந்த அளவு தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. மன்றக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்தார்.
பொடா மற்றும் வெளிநாடுகளில் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் ஆகிய இரு சட்டங்களும் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத சக்திகளை ஒடுக்கும் நோக்கிலேயே கொண்டு வரப்பட்டதாக உள்துறை அமைச்சரான அவர் தெளிவுபடுத்தினார்.
“பொடா சட்டமானது ஒரு தடுப்புச் சட்டம் என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் சமுதாய நீரோட்டத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதற்கு முன் நடைமுறையில் இருந்த இசா சட்டமும் இதோ போன்றதுதான் என்றாலும் அது தற்போது கைவிடப்பட்டுள்ளது,” என்று அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பேசிய ஹமிடி தெரிவித்தார்.
கடந்தாண்டு ஐ.நா மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 2178-ஐ ஒட்டி மலேசியாவில் மேற்கண்ட இரு புதிய சட்டங்களும் அறிமுகப்பட்டதாக குறிப்பிட்ட ஹமிடி, கடந்த பிப்ரவரி 2013 முதல் 16 வெளிநாட்டினர் உட்பட 107 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடனான தொடர்புகளுக்காக மலேசியாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
“ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக சிரியாவுக்கு 63 மலேசியர்கள் சென்றுள்ளனர். அவர்களில் 11 பேர் அங்கு கொல்லப்பட்டனர்” என்றும் ஹமிடி மேலும் தெரிவித்தார்.