Home நாடு பெர்லிஸ் காவல்துறையினர் அனைவரையும் இடைநீக்கம் செய்க – சார்லஸ் சந்தியாகு

பெர்லிஸ் காவல்துறையினர் அனைவரையும் இடைநீக்கம் செய்க – சார்லஸ் சந்தியாகு

600
0
SHARE
Ad

Charles-Santiago-Sliderகோலாலம்பூர், ஜூன் 1 – மனிதக் கடத்தல் நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் முழுமையாக முடியும் வரை பெர்லிஸ் மாநில காவல்துறையினர் அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு வலியுறுத்தியுள்ளார்.

பணம் எனும் பேராசை காரணமாக திரைமறைவில் நடந்துள்ள அனைத்தும் நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“மலேசியர்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல. எனவே நடந்த உண்மைகளை போலீசார் தங்கள் வாயால் தெரிவிக்க வேண்டும். முழு விசாரணையும் நடந்து முடியும் வரை பெர்லிஸ் காவல்படை எந்தவித தாமதமும் இன்றி முழுமையாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்,” என்று சார்லஸ் சந்தியாகு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விவகாரத்தில் காவல்துறையின் புலனாய்வு நடவடிக்கை தோல்வி கண்டிருப்பது தெளிவாக தெரிய வந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மேலும் சங்கடங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு காவல்துறையும் அரசும் தகவல்களை மறைப்பதற்கு வாய்ப்புள்ளதாக சாடியுள்ளார்.

“மனிதக் கடத்தல் முகாம்களிலிருந்து தப்பிப் பிழைத்த சிலரை உள்ளூர் மக்கள் ஏற்கெனவே காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அரசு சார்பற்ற இயக்கமான தெனாகனிதாவும் மனிதக் கடத்தல் குறித்து கடந்த 2008ஆம் ஆண்டே காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளது.

“இதையடுத்து காவல்துறை தொடர் விசாரணைகள் மேற்கொண்டிருக்கும் என்றே நமக்கு நினைக்கத் தோன்றும். ஆனால் இது தொடர்பாக அவர்களிடம் எந்த அறிக்கையும் இல்லை. ஆனால் ஐஜிபி டான்ஷ்ரீ காலிட் அபுபாக்கர் உண்மைகளை விரைவாக மூடி மறைக்க முயற்சிக்கிறார்,” என்று சார்லஸ் சந்தியாகு குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு முகாம்கள் குறித்து உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனைடியும், பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடான் காசிமும் வெளியிட்ட அறிக்கைகளை சந்தியாகு கடுமையாக சாடியுள்ளார்.

தடுப்பு முகாம்களில் நிகழ்ந்த கொலைகள் மற்றும் சித்ரவதைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு ஏதும் தெரியாது என்றும், அவர்கள் பண ஆசையால் தூண்டப்பட்டனர் என்றும் வான் ஜுனைடி விடுத்துள்ள அறிக்கை முட்டாள்தனமானது என்று சந்தியாகு விமர்சித்துள்ளார்.