கோலாலம்பூர்: இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு விமர்சித்துத்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பல குடும்பங்கள் ஏற்கெனவே சிரமப்பட்டு வருவதாகவும், மற்றவர்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும், அவர்களின் முன்னுரிமை வெறுமனே சாதாரண வாழ்க்கையை வாழ்வதே என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையை கடுமையானது என்று சந்தியாகு கூறினார். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்டவர்கள் இந்த நடவடிக்கையால் மிகவும் பாதிக்கப்படுவர்.
“மக்களை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நம்புகிறேன். 10,000 ரிங்கிட் அபராதம் விதிப்பது, நோயை விட மருந்து மோசமானது போன்றது,” என்று அவர் கூறினார்.
10,000 ரிங்கிட் அதிகபட்ச அபராதம் என்றும், குற்றத்தைப் பொறுத்து மேல்முறையீட்டின் அடிப்படையில் அதைக் குறைக்கலாம் என்றும் காவல் துறை கூறியுள்ளது.
தெளிவான தகவல்கள் தேவை என்று சந்தியாகு கூறினார். ஒவ்வொரு குற்றமும் எந்த அபராதம் கொண்டு வரும் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இதனால் சீரான தன்மை இருக்கும்.
“பொது சுகாதார அதிகாரிகளுக்கு தீர்மானிக்க அதிகாரம் வழங்குவது தவறானது. ஒரு நபருக்கு 10,000 ரிங்கிட் மற்றும் வேறு ஒருவருக்கு 3,000 ரிங்கிட் வசூலிப்பதன் அடிப்படை என்ன? நீங்கள் இதைச் செய்தால், இதுதான் அபராதம். நீங்கள் அதைச் செய்தால், இதுதான் அபராதம், என்று தெளிவாகக் கூறுங்கள். இப்போது, இது ஊழலை ஊக்குவிக்கப் போகிறது, ” என்று அவர் கூறினார்.