புதுடெல்லி, ஜூன் 1 – பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணத் தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நாடு 1950-ல் உருவான பின்னர், அந்நாட்டுடன் ராஜரீதியிலான உறவுகளை கடந்த 1992-ல் இந்தியா ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, இஸ்ரேலிடம் இருந்து இந்தியா பெருமளவு ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறது.
முதல்முறையாக, இஸ்ரேல் பிரதமர் என்கிற முறையில், 2003-ல் அப்போதைய பிரதமர் ஏரியல் ஷெரோன் இந்தியாவுக்கு வந்தார்.
இருப்பினும், இந்திய பிரதமர் எவரும் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டதில்லை. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதேபோன்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்த ஆண்டுக்குள் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தில், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டானுக்கும் அவர் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.