கோலாலம்பூர், ஜூன் 1 – சிங்கப்பூருக்குள் சிகரெட் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் மலேசியர்கள் 9 பேர் இந்த வாரம் பிடிபட்டுள்ளனர்.
உட்லன்ட்ஸ் மற்றும் துவாஸ் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளின் வழியே தொடர்ந்து 3 நாட்கள் சிகரெட்டுகளை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனை மைய ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட முயன்ற 3 ஆடவர்கள் மற்றும் 6 பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே 26 முதல் 28 வரையிலான தேதிகளில், சிகரெட்டுகள் அடங்கிய 1984 அட்டைப் பெட்டிகள் மற்றும் சுங்க வரி செலுத்தப்படாத 2395 பாக்கெட் சிகரெட்டுகள் சோதனை மையங்களில் கைப்பற்றப்பட்டுள்ளன என்று சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனை மைய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றுக்கான பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மட்டும் 475,000 ரிங்கிட் மற்றும் 45 ஆயிரம் ரிங்கிட் என கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு வாகனத்தில் வைத்து எடுத்து வரப்பட்ட சிகரெட்டுகளுடன் 3 மலேசிய பெண் பயணிகள் பயணம் செய்துள்ளனர். 23 வயதான மலேசிய ஆடவர் ஒருவர் அந்த வாகனத்தை ஓட்டியுள்ளார்.
புதன்கிழமை நிகழ்ந்த அடுத்த சம்பவத்தில் 26 வயதான மலேசிய ஆடவர் எரிபொருள் நிரப்பும் பகுதியில் சிகரெட்டுகளை மறைத்து எடுத்து வந்தபோது வாகனத்துடன் பிடிபட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த வாரம் வியாழக்கிழமை, 29 வயது மலேசிய பெண்மணி மேலும் இரு மலேசிய பெண்களுடன் சிகரெட்டுகளை வாகனத்தில் மறைத்து வைத்து கடத்த முயன்றபோது மூவரும் பிடிபட்டனர்.
பிடிபட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.