புது டெல்லி, ஜூன் 1 – சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் இயோ, இந்தியாவின் பழமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பேற்க இருக்கிறார். நாளந்தா பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும் 60 வயதான ஜார்ஜ், விரைவில் வேந்தராக பொறுப்பேற்க இருப்பதை இந்திய அரசு உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வர்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ, நாளந்தா பல்கலைக்கழக புதிய வேந்தராக பொறுப்பேற்க உள்ளார். நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஜார்ஜ் இயோவும் ஒருவர். தற்போது நிர்வாகக் குழுவில் இருக்கும் அவர், விரைவில் பதவி ஏற்பார்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பணியாற்றி வந்த அமர்த்தியா சென், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், தற்போது ஜார்ஜ் இயோ அனைவராலும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் ஜார்ஜ் இயோ, நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் உருவாகக் காரணமாக இருந்ததால் அவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.