கோலாலம்பூர், ஜூன் 3 – கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த மலேசியப் படங்களுக்கு மக்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பினைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட முழுநீள மலேசியப் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வருகின்றன.
மலேசியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், பரபரப்பாக அதன் படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகின்றன.
அந்த வரிசையில் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 6 புதிய படங்கள் இதோ:-
என் வீட்டுத் தோட்டத்தில்
‘மெல்லத்திறந்தது கதவு’ படத்தின் வெற்றிற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் ஷமளன் ‘சுகமாய் சுப்புலஷ்மி’ என்ற படத்தை இயக்கினார். அதன் படப்பிடிப்பு வேலைகளெல்லாம் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்குக் காத்திருக்கின்றது. இந்நிலையில் அதற்கு இடைப்பட்ட காலத்தில் புதிய திகில் படம் ஒன்றை இயக்க விரும்பிய கார்த்திக், உடனடியாக தனது ஆஸ்தான நடிகையான ஜெயா கணேசனை வைத்து ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ என்ற படத்தை இயக்கி அண்மையில் அதன் முன்னோட்டத்தையும் வெளியிட்டுள்ளார். முன்னோட்டமே ஆங்கிலப் படங்களின் பாணியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னோட்டம்:
வேற வழி இல்ல
‘வெட்டிப்பசங்க’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வீடு புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம், ‘வேற வழி இல்ல’.
இந்தியா -மலேசியா கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மலேசியாவின் பிரபல படத்தொகுப்பாளரான பிரேம்நாத் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 2-ம் தேதி முதல் மலேசியத் திரையரங்குகள் மட்டுமின்றி தமிழ்நாட்டுத் திரையரங்குகளிலும் வெளியிடப்படவிருக்கின்றது.
இந்த படத்தில் டெனிஸ், ஜாஸ்மின், விகடகவி மகேன், ஆல்வின் மார்ட்டின் உள்ளிட்ட முன்னணி மலேசிய நட்சத்திரங்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்று ஜூன் 3-ம் தேதி ‘வேற வழி இல்ல’ திரைப்படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னோட்டம்:
மறவன்
எஸ்.டி.புவனேந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில், முன்னாள் அஸ்ட்ரோ விழுதுகள் அறிவிப்பாளர் குமரேஸ், டேனிஸ் குமார், சங்கீதா கிருஷ்ணசாமி, லோகன், சீலன், கவிதா தியாகராஜன், புஷ்பா நாராயண் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பிரபல நடிகர் ஹரிதாஸ் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகின்றார். இப்படத்திற்கு சைக்கோ மந்திரா இசையமைத்துள்ளார்.
திகில் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் புவனேந்திரன் அறிவித்துள்ளார்.
‘மறவன்’ உருவாக்கம்:
இரவன்
கேஷ் வில்லன்ஸ் திரைக்கதை இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இரவன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு குறித்து அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர். இப்படத்திற்கு ஏவி வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். பூபா படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படத்தின் இசையமைப்பு பணிகளையும் கேஷ் வில்லன்சே செய்துள்ளார். பாடல்களை மணி வில்லன்ஸ் எழுதியுள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க விரைவில் இரவன் திரைக்கு வரவுள்ளது.
முன்னோட்டம்:
முத்துக்குமார் வாண்டட்
மலேசியா – இந்தியா கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘முத்துக்குமார் வாண்டட்’.
மலேசியாவின் முன்னணி இசையமைப்பாளர் சுந்தரா இப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். சுந்தராவின் ஆஸ்தான பாடலாசிரியரான கோக்கோ நந்தா பாடல்வரிகள் எழுதியிருப்பதோடு, பிரபல பாடகர்களான நரேஷ் ஐயர், திவாகர் உள்ளிட்டோர் உடன் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
எம்.பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக சரண் அவருக்கு ஜோடியாக மலேசிய நடிகை நஷிரா நடிக்க, இவர்களுடன் நிழல்கள் ரவி, ஃபாத்திமா பாபு, வி.சி.ஜெயமணி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பிரபலக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. தற்போது படம் வெளியீட்டிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
முன்னோட்டம்:
வீமன்
எஸ்.டி.பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘சம்பந்தன்’ படத்தில் துன் சம்பந்தனாக நடித்த கிஷோக் இயக்கியிருக்கும் இப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
மலேசியாவின் புகழ்பெற்ற நடிகை ஜாஸ்மின் மைக்கேல் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அமானுஷ்யங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தவிர, ‘தெலுக் இந்தான்’, ‘ஐஸ் கோசோங்’, பென்ஜி நடிப்பில் ’33கிமீ ஃபிரம் கேஎல்’ என்ற புதிய படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனிடையே, ‘மைந்தன்’ சிகே, ‘வெண்ணிற இரவுகள்’ பிரகாஷ் ராஜாராம், நடிகர் பால கணபதி வில்லியம் என பிரபல மலேசியக் கலைஞர்கள் தங்களது புதிய பட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
– ஃபீனிக்ஸ்தாசன்