புதுடெல்லி, ஜூன் 3 – அளவுக்கு அதிகமாக ரசாயன நச்சுத்தன்மை கலக்கப்பட்ட விவகாரத்தில் நெஸ்லே மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு கேரள அரசு தடைவிதித்துள்ள நிலையில், நெஸ்லே நிறுவன அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு டெல்லி அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமாக’ மோனோ சோடியம் குளுடமேட்’ மற்றும் ‘காரியம்’ ரசாயனம் கலந்திருப்பதை, உத்தரபிரதேச உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, நெஸ்லே நூடுல்சுக்கு தடை விதித்த உத்தரபிரதேச அரசு, லக்னோ, மொரகாபாத், கன்னூஜ், மீரட் ஆகிய இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விவகாரம் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடு முழுவதிலும் இருந்து மேகி நூடுல்ஸ் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்னும் சில தினங்களில் பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடத்தப்பட்ட ஆய்வில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பற்றது என்பது தெரியவந்துள்ளது.
உணவு பாதுகாப்பு விதிமுறைக்கு உட்பட்டே ரசாயனங்கள் கலக்கப்பட்டதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே மேகிநூடுல்சுக்கு தடைவிதித்துள்ள கேரள அரசு, கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை திரும்பப்பெற உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைத் தொடர்ந்து அரியானாவிலும் மேகி நூடுல்ஸின் மாதிரிகளை சோதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாதிரிகள் ரசாயணம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.