Home வணிகம்/தொழில் நுட்பம் நெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம்

நெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம்

1218
0
SHARE
Ad

விவே (சுவிட்சர்லாந்து) – அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும் காப்பி உணவகம் ஸ்டார்பக்ஸ் (Starbucks Corporation). மலேசியாவிலும் நிறையக் கிளைகளைக் கொண்டிருக்கும் உணவகம் இதுவாகும். தற்போது இந்நிறுவனம், தனது சொந்தத் தயாரிப்புகளான காப்பித் தூள் மற்றும் உணவுப் பொருட்களை அடைக்கப்பட்ட பொட்டலங்களாக விற்பனை செய்து வருகிறது.

இந்த உணவுப் பொட்டலங்களைக் கடைகளிலும், பேரங்காடிகளிலும் உலகம் முழுவதும் விற்பனை செய்ய ஸ்டார்பக்ஸ் நிறுவனம் நெஸ்லே நிறுவனத்துடன் கரம் கோர்த்துள்ளது. நெஸ்லே நிறுவனத்தைப் பற்றி விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.  சுவிட்சர்லாந்து நாட்டின் நிறுவனமான நெஸ்லே, உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் வணிக நிறுவனமாகும். உணவுப் பொருட்கள் உற்பத்தியில் உலகிலேயே மிகப் பெரிய நிறுவனம் நெஸ்லேதான்!

இந்த வணிகக் கூட்டணி மூலம் இரண்டு நிறுவனங்களும் மேலும் கூடுதலானப் பலன்களைப் பெற முடியும் என வணிக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஸ்டார்பக்ஸ் தயாரிக்கும் காப்பி தொடர்புடைய உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்கி காப்பி தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை நெஸ்லே உலக அளவில் கொண்டு சென்று விற்பனை செய்வதன் மூலம் இரு நிறுவனங்களின் வணிக முத்திரைகளும் (பிராண்ட்) உலக அளவில் மேலும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வணிகக் கூட்டணியின் காரணமாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சுமார் 500 ஊழியர்கள் நெஸ்லே குழுமத்துடன் இணைவார்கள். அவர்கள் இலண்டன் மற்றும் அமெரிக்காவின் சியாட்டல் நகர்களில் நெஸ்லே குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் விவே (vevey) நகரைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் நெஸ்லே அந்நகரிலிருந்து இந்தக் கூட்டணியின் அனைத்துலக விரிவாக்கத்தைக் கையாளும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.